சுற்றுச்சூழல்

'மண்ணை ஒரு வளமாக கருதக்கூடாது; உயிராக கருத வேண்டும்'- ஜக்கி வாசுதேவ் கருத்து

JustinDurai

'மண்வளம் காப்போம்' என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் இல்லை எனவும்  தனி ஒருவராக இந்த மண்ணுக்காக போராடுவதாகவும் தெரிவித்தார் ஜக்கி வாசுதேவ்.

உலக நாடுகளில் மண்வளம் அழிந்து வரும் நிலையில் மண்வளத்தை பாதுகாப்பதற்கான முயற்சியாக லண்டனிலிருந்து இந்தியா வரை 27 நாடுகள் வழியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட ஈஷா யோகா நிறுவனர்  ஜக்கி வாசுதேவ், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது லண்டனில் தொடங்கிய தனது பயணம் 26 நாடுகளின் மக்கள், மொழி, பண்பாடு, வளங்களை கடந்து இந்தியா வந்துள்ளதாகவும் ஒவ்வொரு நாட்டின் மக்களும் மொழிகளும் மட்டுமே மாறுபட்டது தவிர வளங்கள் என்பது ஒன்றுதான் என தெரிவித்தார்.

இப்போதைய சூழலில் எதிர்கால சந்ததியினருக்காக மண் வளத்தை காக்க வேண்டும்; ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்தினை கொடுப்பதற்காக தாய்ப்பாலை கொடுக்கிறாள், அதேபோல மனிதர்களுக்கு மிகப்பெரிய ஊட்டச்சத்தாக இருப்பது மண்வளம் மட்டுமே என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜக்கி வாசுதேவ், ஒரு நாட்டின் உணவுத் தேவை என்பது உக்ரைன் போரில் தெரிந்ததாகவும் ஒவ்வொரு குடிமகனும் எந்த ஒரு கடைக்கு சென்று பொருளை வாங்கினாலும் இயற்கையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது மண்வளம் காப்போம் என்ற போராட்டம் யாருக்கு எதிரானது? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இது யாருக்கு எதிராகவும் இல்லை.  குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என எவருக்கு எதிராகவும் தான் போராட வில்லை எனவும் அதே நேரத்தில் தனி ஒருவராக இந்த மண்ணுக்காக தான் போராடுவதாகவும் தெரிவித்தார். நாட்டில் நீர் தேவை அதிகரித்துள்ளது, ஆனால் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் மேற்கொள்ளும் போது நீர் தேவை குறையும் எனவும் மண் வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இக்கால சந்ததியினருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

நகரத்தில் வாழுகின்ற மக்கள் விவசாயிகளுக்கு விவசாயம் எப்படி செய்ய வேண்டும் என கற்பிக்க வேண்டாம்.  விவசாயிகள் அவர்களாகவே அவர்களுக்கு தெரிந்த முறையில் விவசாயத்தை செய்யட்டும் எனவும் மண் வளத்தை காப்பது எதிர்கால சந்ததியினருக்கான பலம் எனவும் தெரிவித்தார். தாயிடம் தாய்ப்பால் குடித்த போது அதனை உயிர் பாலாக மட்டுமே கருதினோம், மாறாக அது ஒரு வளம் என நாம் கருதவில்லை. அதேபோல இந்த மண்ணும் நாம் ஒரு வளமாக கருதக்கூடாது; அதனை ஒரு உயிராக கருதவேண்டும்'' என்றார். மேலும் ஒரு விவசாயி விவசாயம் செய்வதற்கு முன்னர் அந்த மண்ணை எடுத்து மண் வளத்தை மட்டுமே பரிசோதிப்பார் அப்படி செய்யும்போது மண்ணின் தரம் அவருக்கு புரியும் என்றும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு செயற்கை உரங்களை சேர்த்துக் கொண்டால் தவறில்லை அதே நேரத்தில் மண்வளத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றார் ஜக்கி வாசுதேவ்.

இதையும் படிக்கலாம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாமுக்கு 3 நாள் பயணம்