சுற்றுச்சூழல்

தூங்கும் முன் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் குழந்தைகள்: எச்சரிக்கும் ஆய்வு முடிவு

webteam

தூங்குவதற்கு முன்பாக ஸ்மார்ஃபோனில் விளையாடும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடல் பருமன் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் கெயிட்லின் ஃபுல்லர் இதுகுறுத்து கூறும்போது, குழந்தைகள் தூங்குவதற்கு முன்பாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால், தூக்கம் பாதித்து அவர்களது உடல் பருமன் (பிஎம்ஐ) அதிகரிக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிப்பதோடு, குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடன் மிகவும் சோர்வாகவும் இருக்கும். இரவில் தூங்கப்போகும் முன்பு டிவி அல்லது கேட்ஜெட்களை பயன்படுத்தும் குழந்தைகள், பயன்படுத்தாத குழந்தைகளை விட சராசரியாக அரை மணி நேரம் குறைவாக தூங்குகின்றனர். இதனால் அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரும் என்று கூறினார்.

குழந்தைகள் சுகாதாரம் குறித்த பத்திரிகையில் கெயிட்லின் ஃபுல்லரின் ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது. ஃபுல்லர், 8 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 234 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளார். மேலும், ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட கேட்ஜெட்களை பயன்படுத்த பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், தூங்கும் போதும், சாப்பிடும் போதும் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தாதவாறு தடுக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கான அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.