சுற்றுச்சூழல்

பிறக்கப் போகும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்?

webteam

குழந்தையின் மூளை வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே அறிந்து கொள்ளலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ், இம்பிரியல் காலேஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுக்குழுவான டி.எச்.சி.பி. என்ற அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தாயின் வயிற்றில் கருவாக உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி எப்படி இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை எளிமையாக கண்டறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இப்போது குழந்தை பிறந்தற்குப் பிறகு கூட அதன் மூளை வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கே ஏராளமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக ஒரு குழந்தையால் நடக்க முடிகிறதா, பேச முடிகிறதா,கேட்கும் திறன், பேசும் திறன் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களைக் கண்டறிவதற்கே சில ஆண்டுகள் ஆகும். எனவே இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. எதிர்கால மூளை வளர்ச்சியைக் கண்டறிவதன் மூலம் குழந்தை பிறந்த உடன் ஆட்டிசம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்பது கூடுதல் பலன் என்கிறார்கள் இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்துள்ள விஞ்ஞானிகள்.