சுற்றுச்சூழல்

சத்தியமங்கலம்: சாரல் மழையில் நனைந்தபடி சாலையை கடந்த காட்டு யானை கூட்டம்

kaleelrahman

சாரல் மழையில் நனைந்தபடி ஜாலியாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற காட்டு யானை கூட்டத்தால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக, தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுற்றித்திரிவதோடு அவ்வப்போது சாலையை கடந்து செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை ஆசனூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் குட்டிகளுடன் நின்றிருந்த காட்டு யானை கூட்டம் மழையில் நனைந்தபடி மெதுவாக சாலையை கடந்து சென்றன. சாரல் மழையில் காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்ற காட்சியை வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

இருப்பினும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக பகல் நேரங்களில் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் பகல் நேரங்களில் சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் மித வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.