சுற்றுச்சூழல்

வனத்துறை முயற்சி தோல்வி: மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்த காட்டு யானை 'ரிவால்டோ'

kaleelrahman

ரிவால்டோ காட்டு யானையை வனத்திற்குள் விடும் முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. வனத்தில் விடப்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டும், இடது கண் பார்வையும் இழந்து சுற்றிவந்தது காட்டு யானை ரிவால்டோ. இதனையடுத்து, யானையை முதுமலை முகாம் கொண்டு சென்று வளர்ப்பு யானையாக பராமரிக்க வனத்துறை முடிவெடுத்தது. அதன்படி மே 5ஆம் தேதி யானையை பிடித்து மரக்கூண்டில் அடைத்து வளர்ப்பு யானையாக மாற்றும் பணிகள் துவங்கி கடந்த 3 மாதமாக நடந்து வந்தது.

இதனிடையே யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல்வேறு தரப்பின் பரிந்துரையின்படி ரிவால்டோ யானை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து லாரியில் ஏற்றி முதுமலையில் உள்ள சிக்கல்லா என்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. நாட்டிலேயே முதன் முறையாக வளர்ப்பு யானையாக மாற்றப்பட்ட ஒரு யானையை வனப்பகுதிக்குள் விட்டு அதனை மீண்டும் இயற்கை சூழலுக்கு மாற்றுவது இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர், யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன ரேடியோ காலர் கருவி மூலம் கண்காணிக்கும் பணியும் நடந்து வந்தது. இந்த நிலையில் 3-ஆம் தேதி மதியம் 1 மணி வரை வனத்துறை கண்காணிப்பில் இருந்த ரிவால்டோ திடீரென மாயமானது. வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தேடியும் யானை தென்படவில்லை. மதியம் 1 மணிக்கு மேல் யானை மீது பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலர் கருவியின் சிக்னலும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் யானையை விட்ட வனப்பகுதியை சுற்றி தேடிவந்த நிலையில் யானை சுமார் 30 கிலோமீட்டர் தூரம் நடந்து தெப்பக்காடு பகுதிக்கு வந்ததாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், அங்கு இருந்தது ரிவால்டோ யானை தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து யானை தெப்பகாட்டிலிருந்து மசினகுடியை நோக்கி வனப்பகுதி வழியாகவே நடந்து செல்லத் துவங்கியது. வனத்துறையினர் யானையைத் தொடர்ந்து கண்காணிக்க துவங்கினர்.

இந்த நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர். யானை செல்லும் வழியில் எந்த தடையும் ஏற்படாதவாறு வனத்துறை தேவையான பாதுகாப்பை யானைக்கு வழங்கியது. யானை மிகுந்த மனஅழுத்தத்துடன் வருவதால், பொதுமக்களை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். யானைக்கு உணவு கொடுப்பதோ, அதன் அருகில் செல்ல முயற்சிப்பதோ வேண்டாமென பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து யானை விடியற்காலை வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்தடைந்தாக வனத்துறை தெரிவித்துள்ளது.

அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு ரிவால்டோ யானை வனப்பகுதிகள் விடப்படுவதாக வனத்துறை தெரிவித்தது. ஆனால், அந்த அறிவியலை பொய்யாக்கி ரிவால்டோ தனது புத்திசாலித்தனத்தால் தான் பிடிக்கப்பட்ட அதே பகுதிக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது.