சுற்றுச்சூழல்

குப்பை மேட்டில் வலம் வந்த ’மிஸ் ஜார்க்கண்ட்’.. களத்திற்கு வந்த அதிகாரிகள் - ராஞ்சி வைரல்!

குப்பை மேட்டில் வலம் வந்த ’மிஸ் ஜார்க்கண்ட்’.. களத்திற்கு வந்த அதிகாரிகள் - ராஞ்சி வைரல்!

நிவேதா ஜெகராஜா

'மிஸ் ஜார்க்கண்ட்' ஆக மகுடம் சூடியவர், சுற்றுசூழல் தீங்கை எடுத்துரைக்கும் பொருட்டு குப்பை மேட்டில் நடந்து செல்லும் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக, அதன் எதிரொலியாக தற்போது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது ஜார்க்கண்ட் அரசு.

2020-ஆம் ஆண்டில் மிஸ் ஜார்க்கண்டாக முடிசூட்டப்பட்ட மாடல் அழகி சுர்பி. இவர், ராஞ்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஜிரியில் உள்ள குப்பைக் கிடங்கில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நிலவும் குப்பை நெருக்கடியை எடுத்துச் சொல்லும் பொருட்டு, திட்டமிட்டு இந்த வீடியோவை படமாக்கி இருக்கிறார் சுர்பி. இதற்கு காரணமாக இருந்தவர், புகைப்பட கலைஞர் பிரஞ்சல் குமார். சுற்றுச்சூழலுக்கு இதுபோன்ற குப்பை கிடங்குகள் ஏற்படுத்தும் ஆபத்தை சொல்வதற்காக இதுபோன்ற பிரசாரத்தை இதற்கு முன்பும் பிரஞ்சல் குமார் செய்துள்ளார். இதற்காக விருதும் வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள பிரஞ்சல் குமார், "நாம் ஆண்டுதோறும் சுமார் 62 மில்லியன் டன் குப்பைகளை உருவாக்குகிறோம், அதில் 45 மில்லியன் டன் சுத்திகரிக்கப்படாமலே விட்டுவிடுகிறோம். இது மொத்தக் கழிவுகளில் 75% ஆகும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் கழிவுகளை லாரிகளில் கணக்கிட்டால் 3 மில்லியன் லாரிகள் அளவு இருக்கும். இந்த லாரிகளை வரிசைப்படுத்தினால் அவை பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை அடையும்.

ராஞ்சியில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் குப்பை கொட்டுவது ஒரு பிரச்னை என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் நோக்கம் பிரச்னையை முன்னிலைப்படுத்துவதாகும். இதனால் அரசாங்கம் ஒரு தீர்வைக் காணும் என்பதால், இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

சுரபி குப்பை மேடுகளில் நடந்து செல்லும் வீடியோ, அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாக, ராஞ்சி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. அதன்படி, நகராட்சி துணை ஆணையர் ஷீதல் குமாரி புதன்கிழமை ஒரு கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் "குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பயோ கேஸ் ஆலை ஜிரியில் கட்டப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் இந்த ஆலையின் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க திட்டமிடப்படுள்ளது'' என முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய நகராட்சி துணை ஆணையர் ஷீதல் குமாரி, "திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உயிரி எரிவாயு (சிபிஜி) தயாரிக்கும் ஆலை ராஞ்சியில் அமைப்பதற்காக ஹைட்ரோகார்பன் துறையில் ஒருங்கிணைந்த எரிசக்தி பொதுத்துறை நிறுவனமான கெயில் (இந்தியா) உடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆலையின் கட்டுமான வேலை கடந்த மாதம் தொடங்கியது. இப்போது அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். கண்காணிப்பின் மூலம் திட்டம் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டு, ஜிரியில் கழிவுகள் கொட்டுவது நிறுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், கெயில் (இந்தியா) நிறுவன அதிகாரி இந்த ஆலை தொடர்பாக பேசுகையில், "முதல் கட்டமாக, ஒரு நாளைக்கு 150 டன் பதப்படுத்தும் திறன் கொண்ட ஓர் ஆலையை அமைக்கவிருக்கிறோம். அடுத்தாண்டு டிசம்பருக்குள் பணிகள் முழுமையாக முடிவடையும். ஆலையை அமைப்பதற்கான செலவு தோராயமாக ரூ.28.19 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு கெயில் நிறுவனத்தால் ஏற்கப்படும். இந்தப் பணிகள் முடிந்த பின் மற்றொரு ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஆலைகளை அமைப்பதற்காக ராஞ்சியின் புறநகரில் உள்ள ஜிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தை நகராட்சி எங்களுக்கு வழங்கி இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.