டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆலோசனைக்குப்பின் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்குச் சென்ற மத்தியகுழு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்தனர். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த அதிகாரிகள், ரத்த வங்கி, மருத்தகம், பரிசோதனை மையம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். ஜிப்மர் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றையும் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆய்வுக்கு பின்னர் தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்ட இணை இயக்குநர் கல்பனா பரூவா செய்தியாளர்களிடம் , முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் மட்டுமல்ல தென்மாநிலங்களான, தமிழ்நாடு, கர்நாடகா கேரளா உள்ளிட்ட இடங்களிலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு தொடர்பாக புதுச்சேரி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.