சுற்றுச்சூழல்

மேற்குதொடர்ச்சி மலையின் ”சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தபகுதி” அறிவிப்புக்கு எதிராக மனு

Veeramani

6 மாநிலங்களில் 56,825 சதுர கி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளை  “சூழலியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதி” எனக் குறிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  “சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி (இஎஸ்ஏ)” என ஆறு மாநிலங்களில் உள்ள 56,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடங்களை, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தனது 2018 வரைவு அறிவிப்பில் வெளியிட்டது. தற்போது இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் யுனெஸ்கோவால் உலகின் மிக முக்கியமான எட்டு பல்லுயிர்  மண்டலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 ‘கர்ஷகா சப்தம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழக்கறிஞர் சுவிதுத் எம்.எஸ் என்பவர் கட்கில் கமிட்டி என்றும் அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு (WGEEP) மற்றும் கஸ்தூரிரங்கன் கமிட்டி என்றும் அழைக்கப்படும் உயர்மட்ட செயற்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய மற்றும் கேரளாவிற்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு கோரி மனுசெய்துள்ளார்.

அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை மீறுவதால் அமைச்சகத்தின்  2018  இஎஸ்ஏ அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என்று கேரளாவைச் சேர்ந்த இந்ததன்னார்வ தொண்டு நிறுவனம் கோரியுள்ளது. இயற்கையோடு ஒத்துழைத்து பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வாழ்ந்துவரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தொடர அனுமதிப்பதற்கு பதிலாக, வரைவு அறிவிப்பின் நோக்கம் வாழ்க்கையை சீர்குலைத்து விவசாயத்தை சிதைப்பதாக் தெரிகிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.