கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகள் மற்றும் மேல் மலைப்பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன.
ஊரடங்கு உத்தரவு எல்லாம் மனிதர்களுக்குத்தான். பறவைகளுக்கு இந்தத் தடையாணை எல்லாம் பொருந்தாது. ஆகவேதான் அவை உலகை மிக உல்லாசமாகச் சுற்றித் திரிந்து வருகின்றன. அதுவும் சுற்றுச்சூழலைக் கொடுக்கும் வாகன போக்குவரத்து இல்லை எனத் தெரிந்தவுடன் மலைப் பிரதேசங்களில் மறைந்து வாழ்ந்த வரையாடு போன்ற விலங்கினங்கள் தார்ச் சாலைகளில் வந்து தவம் கிடக்கின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகள் மற்றும் மேல் மலைப்பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் மயில்களுக்கான பிரபல பகுதியாக மயிலாடும் பாறை உள்ளது. கோடைக் கால மழைக்கு, இந்தப் பகுதியில் உள்ள பாறைகளில் அதிக அளவிலான மயில்கள் கூட்டம் கூட்டமாக தோகைவிரித்தாடும் கண்கொள்ளாக்காட்சி காணலாம். அதற்கான பகுதியாக இந்தத் தலம் புகழ்பெற்றது. ஆகவேதான் மயிலாடும் பாறை எனக் காரணப்பெயர் வந்தது.
இந்தப் பகுதிகளில் சமீபத்தில் அதிக அளவிலான மயில்கள் வருகையைக் காண முடிகிறது. கோடை மழையில் நனைந்த மயில்கள், மரக்கிளைகளில் அமர்ந்து, இறக்கைகளை உலர்த்துவதும், அங்கும் இங்கும் பறப்பதுமாக இந்தப் பகுதிகளில் நிகழ்கிறது. மேலும் மேல் மலைப்பகுதிகளிலும் மயில்கள் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக மேல்மலையினர் தெரிவிக்கின்றனர்.