சுற்றுச்சூழல்

வாய்ப்புண் பாடாய்படுத்துகிறதா?: இதோ மருத்துவரின் விளக்கம் உங்களுக்காக..!

JustinDurai

நாம் அனைவரும் ஏதேனும் ஒரு சமயத்தில் வாய்ப் புண்ணோடு மல்லுக்கட்டி போராடியிருப்போம். அப்போது அதீத வலி, எரிச்சல் மற்றும் உணவு உண்ண சிரமம் ஏற்படும்.  வாய்ப்புண் வருவது ஏன்? வராமல் தடுப்பது எப்படி? 

மருத்துவர் அரவிந்தராஜ் கூறும்போது, ‘’இதன் பெயர் 'APTHOUS STOMATITIS'. வட்ட வடிவமான இந்த புண்ணின் நடுப்பகுதி வெள்ளையாகவும் வெளிப்பகுதி சிகப்பாகவும் இருத்தலே இதை கண்டறியும் முறை.

பெரும்பாலான மக்களுக்கு ஜீன்கள் காரணமாகவே இது ஏற்படும். மேலும் மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படுகிறது. நாம் உபயோகிக்கும் பற்பசையில் உள்ள ‘சோடியம் லாரில் சல்பேட்’ அளவு அதிகமாக இருந்தாலும் இது ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தின் பொழுது ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளும் இது நிகழக் காரணம். காபி அருந்துவது, அதிக சாக்லெட் உண்பது, குடி, புகை போன்றவையும் காரணிகள்.

இது பயப்பட வேண்டிய புண் என்றால் இல்லை. இது புற்றுநோயாக மாறும் புண்ணும் அல்ல. இது பலருக்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் சரியாகிவிடும். மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும். சில குடல் சம்மந்தப்பட்ட உபாதைகள் மூலம் இது மீண்டும் வரும் என்பதால் மூலக்காரணம் என்ன என்பதை அறியவே ஆலோசனை பெறுவது நலம்.

மேலும் வைட்டமின் B12, Folic Acid, Zinc குறைந்த அளவில் இருப்பவர்களுக்கு இது அதிக அளவில் ஏற்படும். ஆகவே, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இத்தகைய புண் இருக்கும் பட்சத்தில் உங்கள் வாய் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது மேலும் கிருமிகளை அண்டவிடாமல் உங்களை காக்கும். எக்காரணம் கொண்டும் மஞ்சள், வேப்பிலை தழை போன்றவற்றை இவை மீது அப்ப வேண்டாம். மருத்துவரை கலந்தாலோசித்து அவர் கூறும்படி செய்தல் சிறப்பு’’ என்கிறார் அவர்.