பறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்யும் வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி 5 ஆம் ஆண்டாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான இந்த கணக்கெடுப்பு ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகிலோ, சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயாரித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பறவைகள் கணக்கெடுப்பு பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து வரும் முயற்சியாகும். இதன்மூலம், பல பொதுப் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும்.
இதுபோலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு GBBC - Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் போது பறவைகள் கணக்கெடுப்பை கேரள பேர்டர்ஸ் குழுவினர் நடத்தினர். 2015-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்து 4 நாள்களில், அதாவது ஜனவரி 15 முதல் 18 ஆம் தேதி வரை 329 பறவைகள் குறித்த பட்டியல்கள், 85 பறவை ஆர்வலர்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த நாள்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பறவைகளில், முதல் 10 இடங்களில் காகம், மைனா, மடையான், பச்சைக் கிளி, வெண்மார்பு மீன்கொத்தி, உண்ணிக்கொக்கு, மாடப்புறா, கரிச்சான், அண்டங்காக்கை முதலியவை இடம் பெற்றன.
எப்படிப் பட்டியலிடுவது ?
பொதுமக்கள் தாங்கள் பார்த்த பறவைகள் குறித்த தகவலை இணையத்தில் எப்படி பதிவேற்றம் செய்வது, பறவைகளைப் பார்த்தலின் நெறிமுறைகள், பறவைகளை அடையாளம் காண அவற்றின் தமிழ்ப் பெயர்களுடன் கூடிய படங்கள் முதலிய காட்சியளிப்புகள், விளக்கவுரைகள் குறித்த விவரங்களை இந்தக் கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் இணையதளமான www.ebird.org/india இல் காணலாம். மேலும், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்கு http:www.birdcount.ineventspongal-bird-count என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம்.
என்ன செய்ய வேண்டும் ?
குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் பறவைகளைப் பார்த்து, அடையாளம் கண்டு,அவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு பறவைப் பட்டியலை தயார் செய்யவும். அப்பட்டியலை www.ebird.org/india ல் உள்ளிட வேண்டும். உங்களிடம் ஸ்மார்ட் போன் இருந்தால் eBird செயலியினை (app) இலவசமாக பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பட்டியலை தயார் செய்து உள்ளிடலாம். அதற்கு முதலில் eBird ல் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இதுகுறித்து பறவைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான பி.ஜெகந்நாதன் கூறியது: பறவைகளின் வாழிடங்கள் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் மேல் நாட்டம் வருவதற்கும், அவற்றின் மேல் கரிசனம் கொள்ளவும் பொதுமக்கள், இளைய தலைமுறையினரிடையே பறவைகளைப் பார்த்தல் (Bird Watching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை ஒரு நல்ல பொழுதுபோக்காக அனைவரும் எடுத்துக் கொள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம். ஆகவே, பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் பொங்கல் தினத்தன்று பறவைகளைப் பார்த்துக் கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.