சுற்றுச்சூழல்

கும்கி யானைகளுக்கு அரிசி கொடுத்த பள்ளி மாணவர்களை தூதுவர்களாக நியமித்த அதிகாரிகள்

kaleelrahman

நீலகிரியில் கும்கி யானைகளுக்கு உணவாக அரிசியை கொண்டு வந்து கொடுத்த பள்ளி மாணவர்களை தூதுவர்களாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடுகாணி, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளை இரண்டு காட்டு யானைகள் சேதப்படுத்தி வந்தது. இந்த இரண்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் நாடுகாணி பகுதிக்கு வரவழைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 4 கும்கி யானைகளும் நாடுகணியில் உள்ள ஜீன்பூல் தவிர ஆராய்ச்சி மையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. இந்த யானைகளை உள்ளூரை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினம்தோறும் வந்து பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று 3 பள்ளி மாணவர்கள் ஜீன்பூல் தவிர ஆராய்ச்சி மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகளை பார்ப்பதற்காக ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர். வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நாடுகாணி பகுதியை சேர்ந்த நகுல், சஞ்சய், சஞ்சேஷ் குமார் என தெரிய வந்தது. கும்கி யானைகளின் உணவிற்காக வீட்டில் இருந்து 25 கிலோ அரிசியை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

கும்கி யானைகளுக்கு பசி எடுக்கும் என்பதால் தாங்கள் அரிசியை கொண்டு வந்ததாக கூறியது வனத்துறையினரை நெகிழ்ச்சியடைய செய்தது. அரிசியை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் மாணவர்களை புகைப்படம் எடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரன் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மஞ்சுநாதா ஆகியோருக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

இதையடுத்து மாணவர்களின் வனவிலங்கு மீதான ஆர்வத்தை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மாணவர்களின் வனவிலங்கு மற்றும் இயற்கை மீது உள்ள ஆர்வத்தை பாராட்டும் வகையில் ஜீன்பூல் தவிர ஆராய்ச்சி மையத்தின் தூதுவர்களாக நியமிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.