சுற்றுச்சூழல்

அசாம் மாநிலத்தில் உயிரிழந்த 100 கழுகுகள்: காரணம் என்ன?

EllusamyKarthik

அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் சுமார் 100 கழுகுகள் இறந்துள்ளதாக அந்த மாநிலத்தின் வனத்துறை தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள சாய்கான் பகுதிக்கு அருகில் கழுகுகள் இறந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உயிரிழந்த கழுகுகளை அங்கிருந்து மீட்டுள்ளனர். அதன் அருகே ஆடுகளின் எலும்புகள் இருந்துள்ளன. 

கழுகுகள் விஷம் கலந்த உணவை உட்கொண்ட காரணத்தால் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர். 

இருந்தாலும் உடற்கூறு ஆய்வுக்கு பிறகே தங்களால் இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக ஒரே நேரத்தில் 100 கழுகுகள் உயிரிழந்து கிடப்பதை தான் இப்போதுதான் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் அந்த மாவட்ட வன அதிகாரி. இதே போல அண்மையில் சில கழுகுகள் அதே பகுதியில் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் தொடராமல் இருக்க உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க உள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைப்பிலும், உணவுச் சங்கிலியிலும் கழுகுகளின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.