சுற்றுச்சூழல்

"ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுங்கள்" - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

kaleelrahman

தமிழகம்- கேரளாவில் ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க தமிழக - கேரள வனத்துறையினர், தென்னக ரயில்வே துறையுடன் ஒரு மாதத்திற்குள் மத்திய கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டிக்காடிலிருந்து தமிழகத்தின் கோவை மாவட்டம் மதுக்கரை வரை உள்ள ரயில் தடத்தில், ரயில்களில் குறிப்பாக இரவு நேரத்தில் யானைகள் அதிகளவில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக செய்தித்தாளில் செய்தி வெளியானது. அதனை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்தது.

தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட பதில் மனுவில், கேரள மாநிலம் கோட்டிக்காடு - தமிழ்நாடு கோவை மதுக்கரை வரை உள்ள தடத்தில் யானைகள் வருவதை ரயில் இன்ஜின் ஓட்டுநர்களால் சரியாக பார்க்க முடிவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், யானைகள் உயிரிழப்பை தடுக்க தங்கள் தரப்பில் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தென்னக ரயில்வே, கேரள வனத்துறையினர் விளக்கம் அளித்திருந்தனர்.

அனைத்து தரப்பு விளக்கங்களையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு குழு தமிழகம்- கேரளா மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து இந்த உத்தரவு காலத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிட்டது. ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்த கூட்டத்தில் முடிவெடுக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.