சுற்றுச்சூழல்

பாலிதீன் பைகளுக்கு ‘குட்பை’.. மரக்கன்றுகளுக்கு் புத்துயிர் அளித்த பெண் வனத்துறை அதிகாரி

webteam

மனித வாழ்க்கைக்கு அதிமுக்கியமான அடிப்படைத் தேவை காற்றும், நீரும். அதற்காக இயற்கை கொடுத்த பரிசுதான் பசுமையான மரங்களும், பைம்பொழில் காடுகளும்! இதனைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் பிறத்தேவைகளை விட இயற்கையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினர். ஆனால் இன்று, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அடிப்படைத் தேவைக்கான ஆதாரமே அலட்சியத்தினாலும், பேராசையானாலும் அழிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து எண்ணற்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், மனிதனின் மனிதாபிமானம் இல்லாத மூளை அதைக் காசாக்குவதிலே முனைப்புக் காட்டி வருகிறது. சமீப காலங்களாக இளைஞர்களிடையே எழுந்திருக்கும் இயற்கைக் குறித்த விழிப்புணர்வு இதயத்திற்கு சிறிது இதம் சேர்த்தாலும், அதில் வார்த்தைகளைக் கடந்து செயலில் இறங்குபவர்கள் மிகச் சிலர் என்பது கசப்பான உண்மை.

இயற்கையை காக்க இயற்கை ஆர்வலர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டிருக்க, வனத்துறைச் சார்ந்த அதிகாரிகளும் களத்தில் இறங்கி இயற்கையை மேம்படுத்துவதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகின்றனர். அந்த முனைப்பின் பலனாகத்தான் நீண்ட நாட்களாக மரக்கன்றுகள் நடுவதில் இருந்த ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முயன்று இருக்கிறார்கள் கேரள வனத்துறை அதிகாரியான டாக்டர். செ.மீனாட்சியும் அவர்களது குழுவும்.

அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா, மரக்கன்றுகளுக்கு பாலீதீன் வீடுகளில் இருந்து விடுதலை அளித்து அதற்கு பதிலாக தேங்காய் நார்கள் அடங்கிய வீட்டை பரிசளித்துள்ளார்கள். இது எப்படி சாத்தியமானது என்பதைத் தெரிந்து கொள்ள அவரையே தொடர்பு கொண்டு பேசினோம். வேலையில் இருந்த அதே பரபரப்புடன் தேங்காய் நாறு வீடு உருவான கதையை ஒவ்வொரு இழைகளாக விவரிக்க ஆரம்பித்தார்.

முதலில் இப்படி ஒன்றைச் செய்ய வேண்டும் ஏன் உங்களுக்கு ஏன் தோன்றியது?

கேரளாவில் ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஒரு கோடி மரக்கன்றுகளை பள்ளிகளுக்கும், நிறுவனங்களுக்கும், கிராமங்களுக்கும் இன்ன பிற இடங்களுக்கும் வழங்குவது வழக்கம். அப்படி கடந்த 2018 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று கண்ணூரில் நடந்த விழாவிற்கு கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன் தலைமை தாங்கினார்.

ஒவ்வொரு வருடமும் காலநிலை சீர்கேடு, புவிவெப்பமயமாதல் இன்ன பிற இயற்கையின் இன்றியமையாதலை முன்னிறுத்தி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஐ.நா.சபை ஒரு கருப்பொருளின் கீழ் இயங்க அறிவிக்கும். அந்த தலைப்பின் கீழ் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். அப்படி 2018 ஆம் வருடம் அறிவிக்கப்பட்ட கருப்பொருள்தான் BEAT PLASTIC POLLUTION.

விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும்போது முதல்வர், வனத்துறைதான் BEAT PLASTIC POLLUTION என்ற தலைப்பின் விழிப்புணர்வு தரவேண்டியவர்கள். ஆனால் நீங்களே பிளாஸ்டிக் பைகளில் மரக்கன்றுகளை வழங்குகின்றீர்களே என்று கேட்டார். அவர் கூறியது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. சிந்திக்க வைத்தது. அந்த முனைப்புதான் மரக்கன்றுகளின் பாலீதீன் பைகளுக்கு மாற்றாக வேறு ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது.

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக என்னென்ன முயற்சிகளை கையில் எடுத்தீர்கள்? அதில் நீங்கள் சந்தித்த பிரச்னைகள் என்னென்ன?

நாற்றங்கால் உற்பத்தியில் முதலில் பாலிதீன் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிக்க ஆரம்பித்தோம். ஆனால் அது எங்களின் செயல்முறைக்கு ஒத்து வரவில்லை. மரங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது மரக்கன்றுகளுக்கு பாலீதீன் பைகள் கொடுத்த பாதுகாப்பை துணிப்பைகள் கொடுக்க வில்லை. இன்னொன்று துணிப்பைகளால் மரக்கன்றுகளின் வேர்களும் பாதிக்கப்பட்டன.

குறிப்பிட்ட வடிவத்தில் இருக்க வேண்டிய அந்த மண் அமைப்பு, துணிப்பைகள் வைத்து தண்ணீர் ஊற்றும் போது மாறிவிட்டன. இதனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த முயற்சி தோல்வியடைய, அடுத்ததாக அதே துணிப்பைகளில் சிறிது ரப்பர் கோட்டிங் கொடுத்து முயற்சி செய்தோம். ஆனால் அதிலும் இதே போன்ற பிரச்னைகள். அதனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதனை தொடர்ந்து மூங்கில் தண்டுகளை உபயோகப்படுத்தி பார்த்தோம். ஆனால் அதிலும் வெடிப்பும், கீறலும் ஏற்பட்டு மரக்கன்றுகளின் வேர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தண்ணீரும் வெளியேறிக் கொண்டே இருந்தது. இதனால் மரக்கன்றின் வளரும் தன்மையும், தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து தேங்காய் நெட்டிகளை கொண்டு முயற்சி செய்தோம். ஆனால் 90 லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளுக்கு தேங்காய் நெட்டிகளை திரட்டுவது என்பது மிகக் கடினமான வேலை என்பது எங்களுக்கு புரிந்தது. அதையும் தவிர நாங்கள் சந்தித்த பழையத் தொழில்நுட்பப் பிரச்சினைகளையே இதிலும் சந்தித்தோம்.

இதில் நாங்கள் சந்தித்த மிகப் பெரிய சவால் நேரம்தான். ஒவ்வொரு அறிவியல்சார்ந்த பரிசோதனைக்கும் செலவிடும் நேரம்தான் சான்று. பாலீதீனுக்கு பதிலாக மாற்றுப் பொருளை உபயோகப்படுத்தி எடுக்கும் பரிசோதனை முயற்சிக்கு எங்களுக்கு 6 மாத காலம் தேவைப்படும். அதன் பின்னரே அந்த முயற்சி வெற்றியா? தோல்வியா? என்பது தெரிய வரும். இந்த முயற்சிகளுக்கே எங்களுக்கு ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டது. அதிலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. செலவிடும் நிதிக்கும் நாம்தான் பொறுப்பு .இருப்பினும் அதை எதிர்கொண்டே நாங்கள் அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்கினோம்.

தேங்காய் நார்களைக் கொண்டு முயற்சிக்கலாம் என்ற யோசனை எப்படி வந்தது?

நான் எர்ணாகுளத்தில் வனப்பாதுகாவலராக இருக்கிறேன். பாலக்காட்டில் சக வனத்துறை அதிகாரியான ஷேக் ஹீசைனிடம் தொடர்ந்து பேசி வந்தேன். அதனால் அவரும் இது குறித்த தேடலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு தமிழ்நாட்டில் வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பத்ரசாமி என்பவர் தேங்காய் நார்களை உபயோகித்து பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். எங்களுக்கும் அது மரக்கன்று உற்பத்திக்கு சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. உடனடியாக களத்தில் இறங்கினோம். ஆனால் எங்களுக்கு எந்த சிறு, குறு நிறுவனமும் உதவ முன் வரவில்லை.



இறுதியாக பொள்ளாச்சியில் உள்ள ப்ரீமியர் காயர் ப்ரோடக்ட்ஸ் என்ற காயர் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் இதைச் செய்து கொடுக்க முன்வந்தது. அவர்களிடம் தேங்காய் நார்களை வைத்து செய்த சில ஜாடிகள், தொட்டிகள் உள்ளிட்டப் பொருள்கள் இருந்தன. ஆனால் அவை எங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. ஆகவே எங்களுக்கு தேவையான சில அளவீடுகளை கொடுத்து, அதற்கேற்றபடி செய்து தரச் சொன்னோம்.

அவர்களும் நாங்கள் சொன்ன எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்து அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தனர். முதலில் 1000 மரக்கன்றுகளில் முயற்சி செய்தோம். அதில் நிறைய தொழில்நுட்பச் சிக்கல்கள். ஆனால் எல்லாமே சமாளிக்கக் கூடிய சிக்கல்களாக இருந்ததால் ஒவ்வொன்றாகச் சரி செய்தோம். இறுதியில் உறுதித்தன்மையைப்பொறுத்து (2.5 mm thickness, 50 mm diameter, and 100 mm length) என்ற அளவீட்டில் தேங்காய் நார் பைகளை வாங்கினோம். இந்த வடிவத்தில் 500 மரக்கன்றுகளை முயற்சி செய்தோம். நினைத்து பார்க்காத அளவிற்கு முன்னேற்றம். இதற்காகவே நாங்கள் சிலருக்கு சிறப்புப்பயிற்சி கொடுத்திருந்தோம். அவர்களும் அதை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.

தேங்காய் நார் ஈரப்பதத்தை அதிக நேரம் தக்க வைக்கும் என்பதாலும், மண்ணோடு எளிதாக கலந்து விடும் என்பதாலும் மரக்கன்றுகள் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக வளர ஆரம்பித்து விட்டன. இன்னும் சொல்லப்போனால் பாலிதீன் பைகளில் மரக்கன்றுகளை வைத்து, நாம் ஒரு இடத்தில் நடும் போது இரண்டு மூன்று நாட்களுக்கு அதில் உயிரே இருக்காது. உயிர்த்தண்ணீர் விடவேண்டும். ஆனால் தேங்காய் நார் பைகளில் வைத்த மரக்கன்றுகளில் சோர்வே காணப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த முயற்சியை தொடங்கினோம். அந்த முயற்சி மார்ச் மாதத்தில் வெற்றி கண்டது. தற்போது முதற்கட்டமாக தேங்காய் நார் பைகளில் வைத்து 10 லட்சம் மரக்கன்றுகளை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் நடவு செய்துள்ளோம். அடுத்தகட்ட பரிசோதனை வேலையும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்திய மாநிலமும் ஆண்டுதோறும் கிட்டதட்ட ஒன்றரை கோடி பாலீதீன் பைகளை மரக்கன்றுகள் ( விவசாயம், தோட்டக்கலை, ரப்பர், இதரபிற) உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. 400 வருடங்கள் ஆனாலும் மட்காத பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.எனவே காயர் பைகள் பரிசோதனை வெற்றிப்பெற்றால் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் சாதனமாக அமையும்.

இதற்கிடையில் நாங்கள் ஒரு தேங்காய் நார்பைக்கு தற்போது 3 ரூபாய் கொடுக்கிறோம். இதில் அரசாங்கத்தின் நிதி ஒத்துழைப்பு அளப்பறியது. ஆகவே START UP தொழில் முனைவோர்கள் இந்தத் தொழிலில் கவனம் செலுத்தி நாற்றங்கால் உற்பத்தியிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் எங்களுடன் துணை நிற்க வேண்டும்" என்ற கோரிக்கையுடன் முடித்த மீனாட்சியின் வார்த்தைகளில் பெருமிதம் மிளிர்ந்து காணப்பட்டது.