சுற்றுச்சூழல்

கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டு மாணவி வினிஷா உமாசங்கரின் உரை

webteam

“புவி வெப்பமயமாதலை தடுக்க வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்” என பேசி உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றி சர்வதேச கவனம் பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுமி.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர். இவர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர். சூரிய சக்தியில் இயங்குவதால் கரியின் பயன்பாடு குறைந்து சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்ற இவரது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் இளவரசர் வில்லியம் அளிக்கும் எர்த்ஷாட் பரிசு போட்டிக்கும் இவர் தேர்வானார். இவருக்கு கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய வினிஷா உமாசங்கர், “நான் இந்தியாவில் இருந்து மட்டும் பேசவரவில்லை. பூமியில் இருந்து பேச வந்துள்ளேன்” என கூறி தன் உரையை தொங்கினார்.

தொடர்ந்து பேசுகையில், “உலக தலைவர்களின் வெற்று அறிவிப்புகள் என் சந்ததியினரை கோபமடைய செய்துள்ளது. ஆனால் நாங்கள் கோவத்தில் நேரம் செலுத்த விரும்பவில்லை. செயல்பாட்டில் இறங்கி இருக்கிறோம். உலக தலைவர்கள் பழைய நடைமுறைகளை கைவிடுத்து சுற்றுசூழலை காப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார். வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல் அவற்றை செயல்படுத்த வேண்டிய நேரமிது என்றும் வினிஷா உமாசங்கர் தெரிவித்தார்.