இந்தியப் பேரழிவுகள் (கோப்புப் படம்) pt web
சுற்றுச்சூழல்

காலநிலை பேரழிவுகள் | 9ஆம் இடத்தில் இந்தியா... 30 ஆண்டுகளில் 80.000 - க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு !

கடந்த முப்பது ஆண்டுகளில் நிகழ்ந்த காலநிலைப் பேரழிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாம் இடத்தில் இருப்பதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

ஜெர்மன்வாட்ச் என்ற சுற்றுச்சூழல் சிந்தனைக் குழு வெளியிட்ட காலநிலை இடர் குறியீடு 2026 அறிக்கையில், இந்தியா கடந்த 30 ஆண்டுகளில் தீவிர காலநிலை பேரழிவு பாதிப்புகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன்வாட்ச் (Germanwatch) என்ற சுற்றுச்சூழல் சிந்தனைக் குழு வெளியிட்ட காலநிலை இடர் குறியீடு 2026 (Climate Risk Index) அறிக்கையின்படி, கடந்த மூன்று தசாப்தங்களில் தீவிர காலநிலைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டின் பெலெம் நகரில் நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

ஜெர்மன்வாட்ச் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழு

1995 முதல் 2024 வரையிலான முப்பதாண்டு காலகட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்ட சுமார் 430 தீவிர வானிலை நிகழ்வுகளால் 80,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.1998 குஜராத் புயல், 1999 ஒடிசா புயல் மற்றும் 2013 உத்தராகண்ட் வெள்ளம் ஆகியவை காலநிலைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற முக்கியக் காரணமாக அமைந்தன.

மேலும், இந்தியாவில் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியா, "தொடர்ச்சியான காலநிலை அச்சுறுத்தலை" எதிர்கொள்வதாக இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

இதனால், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெரிய மக்கள்தொகை மற்றும் பருவமழையைச் சார்ந்திருத்தல் ஆகியவை காலநிலை பேரிடர்களின் பாதிப்புகளை அதிகரிக்கின்றன. 2024-ல் மட்டும், கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியா போன்ற வளரும் நாடுகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விரைவான மற்றும் உறுதியான தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.