பசுமை எரிசக்திப் பயன்பாட்டால் 2035க்குள் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி 40 சதவீதம் வரை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
கிளைமேட் கம்பாட்டிபிள் ஃபியூச்சர்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் உயிரி ஆற்றல் ஆகியவற்றை விரைவுபடுத்தினால், 2035ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஆண்டு எரிபொருள் இறக்குமதிச் செலவு 7.4 லட்சம் கோடி ரூபாயாகச் சரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவான மின்மயமாக்கல் மூலம் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 9.6 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் என்றும், 2045ஆம் ஆண்டுக்குள் நேரடி புதைபடிவ எரிபொருள் இறக்குமதியைப் பூஜ்ஜியமாகக் குறைத்து 87 சதவீதத் தேவையைப் பசுமை ஆற்றல் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் மொத்த எரிசக்தித் தேவையில் மின்சாரத்தின் பங்கு 29 சதவீதமாக உள்ள நிலையில், விரைவான மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ், இது 2035இல் 54 சதவீதமாகவும், 2045இல் 76 சதவீதமாகவும் உயரும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்திய ரயில்வே தனது அகல ரயில் பாதைகளில் 99.6 சதவீதத்தை மின்மயமாக்கியுள்ளதோடு, 2026 செப்டம்பரில் மின்சார வாகன விற்பனை 84 சதவீதம் உயர்ந்து 13 புள்ளி 11 சதவீதச் சந்தைப் பங்கைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் மொத்த மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்திற்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் இடம்பெறுவதும் எரிபொருள் இறக்குமதி குறைப்பு என்ற இலக்கை எளிதாக எட்ட உதவும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.