சுற்றுச்சூழல்

ஈரோடு: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தை: அச்சத்தில் தாளவாடி விவசாயிகள்

kaleelrahman

தாளவாடி அருகே சிறுத்தை நடமாட்டம் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனத்தை ஒட்டியுள்ள சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக ஆடு, மாடு மற்றும் காவல் நாயைகளை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் இரவு நேர விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய பின் சிறுத்தை, அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. அதனை பிடிக்க வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வருவதால் விவசாயிகள் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து வருகின்றனர்.

பகல் நேரத்தில் கல்குவாரியில் பதுங்கிக் கொள்ளும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் விவசாயி தோட்டத்தில் வைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சி பதிவானது. அப்போது தடுப்பு சுவருக்குள் இருந்த நாய் சிறுத்தையை பார்த்து குரைத்தன. அவ்வழியாக வந்த தெருநாயை பார்த்த சிறுத்தை அதை பிடிக்க வேகமாக செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.