சுற்றுச்சூழல்

Eco India: காட்டுத்தீயை தடுக்க உதவும் ஆடுகள்... எப்படி தெரியுமா?

Sinekadhara

புதிய தலைமுறை டி டபுள்யூ எனும் புகழ்பெற்ற ஜெர்மனிய தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கும், பச்சைப்பூமிக்கு பாத்தி கட்டும் காட்சி ஆவணம் ‘’ஈகோ இந்தியா’’(Eco India). இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் நிலவரத்தை நேரிடையாக ஆய்ந்து காட்சிப்படுத்தியிருக்கிறது ஈகோ இந்தியா (Eco India). இந்த நிகழ்ச்சி தனிமனிதன் முதல் அரசு வரை அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது. மட்டுமின்றி சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயலும் பசுமைப்போராளிகளை அடையாளம் கண்டு உலகிற்குச் சொல்கிறது.

சில சமயம் பழமையான வரலாறும், பாரம்பரியமும் நவீன பிரச்னைகளுக்கான தீர்வைச் சொல்லும். போர்ச்சுகல் நாட்டையே உலுக்கும் பிரச்னை காட்டுத்தீ. இதற்கு தீர்வு என்ன தெரியுமா? அக்கால மனிதர்களைப்போல ஆட்டு மந்தைகளை காட்டுக்குள் மேயவிடுவதுதான்.

கோயிம்ரா என்கிற போர்ச்சுகல் மலைப்பகுதியில் காட்டுத்தீ அடிக்கடி பரவியதால் கிராமத்திலிருந்த பெரும்பாலானோர் ஊரை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள். அதனால் பராமரிப்புக்கு ஆளில்லாமல் தாவரங்கள் காய்ந்து போய் எளிதாக தீப்பற்றிக் கொள்ளும் நிலை உருவாகி இருந்தது. முன்பெல்லாம் இவற்றை அப்புறப்படுத்த மிகப்பெரிய இயந்திரங்கள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது காட்டுத்தீ பரவாமல் இருக்க ஆட்டு மந்தைகள் இவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. ஆடுகள் அங்கு காயும் நிலையில் உள்ள புதர்களையும், தாவரங்களையும் உணவாக்கிக் கொள்கின்றன. அதனால் காட்டுத்தீ பற்றிக்கொள்ளும் அபாயம் குறைகிறது. எல்லோரும் கைவிட்டுப் போன இந்த பகுதியில், இதுவே ஒரு வேலை வாய்ப்பாகவும், மதிப்பாவும் மாறியிருக்கிறது.

அங்கு ஓக் மரங்கள் வளர்க்கப்படுகிறது. சிறு கிளைகளை கத்தரித்துவிடும்போது அம்மரங்கள் பெரிதாக வளர்கிறது. அந்த ஓக் மரங்கள் பெரிதாகும்போது அதன் நிழலில் குறைவான அளவே புல் வளரும். இதானல் புல்வெளி காய்ந்து தீப்பற்றும் அபாயம் குறைகிறது. இந்த நிலத்திலிருந்து பெரிய வருமானம் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும் புதிய மேலாண்மை முறையை ஏற்றுக்கொள்ள இங்குள்ள மக்கள் தயாராகிவிட்டனர்.

ஐரோப்பிய நாடுகளில் போர்ச்சுகல்தான் அதிக அளவில் காட்டுத்தீயால் பாதிக்கப்படும் நாடு. தீயணைப்புத் துறையும், கோம்ரா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் போர்ச்சுகலின் பருவ நிலையும், ஒற்றை பயிர்முறையும், குறைவான மக்கள் நடமாட்டமும்தான் இதற்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. காட்டுத் தீ பிரச்னையை குறைக்க போர்ச்சுகல் நாடு பல்வேறு உத்திகளை கையாள்கிறது. பாரம்பரியமிக்க பழைய முறைக்குத் திரும்புவது அவற்றில் ஒன்று. அதில் ஆட்டுமந்தைகளின் பங்களிப்பு அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.