தமிழக அரசால் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் காரணமாக காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 18-ம் தேதி அமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் நிலைமை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் பெருமளவு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு மருந்துத் துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் கூடுதல் மற்றும் இணை இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நோய் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று களப் பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக குறைந்து வருவதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.