தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. திருவள்ளூரில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மதுரை, கோவை போன்ற பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
திருவள்ளூரில் ஒரேநாளில் இரு குழந்தைகள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளன. அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், யாமினி தம்பதியின் 3 வயது குழந்தை ஆஷிதா காய்ச்சலுக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல சின்னஎடப்பாளையம் பகுதியில் கணேஷ் என்பவரின் 6 வயது மகன் ரித்தீஷ் வீரா, காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ\மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
இது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட சுகாதாரத் துறையினர், ஆஷிதா, காய்ச்சலில் வலிப்பு வந்து உயிரிழந்ததாகவும், ரித்தீஷ் வீரா, மூளைக்காய்ச்சலால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கோவையில், டெங்குவால் 3 பேரும், பன்றிக்காய்ச்சலால் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி 50 பேர் காய்ச்சலோடு வந்து சிகிச்சை பெற்றுச்செல்லும் நிலையில், 102 பேருக்கு டெங்கு அறிகுறிகளோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி பொன்னம்மாள் என்பவருக்கு வயிற்றில் உள்ள சிசு, உயிரிழந்ததையடுத்து, நேற்று அறுவை சிகிச்சை மூலம் சிசு அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாள்தோறும் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்றுச் செல்கிறார்கள். சேலம் மாவட்டம் ஓமலூரில் நாள்தோறும் 600 முதல் 700 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துமனைக்கு காய்ச்சல் காரணமாக நாள்தோறும் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் வருவதால், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.