சுற்றுச்சூழல்

சென்னையில் காற்று மாசு அளவு எவ்வளவு? கூடியதா குறைந்ததா?

JustinDurai

இந்தியாவில் காற்று மாசு அதிகம் ஏற்படும் 10 நகரங்களில் ஒன்றான சென்னையில் இந்தாண்டு காற்றின் தரம் அதிகரித்துள்ளது.

சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக, சராசரி ஆயுளில் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 10 வருடமும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 5 வருடமும் குறைவதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இதற்கிடையே தேசிய சுத்தமான காற்று திட்டம் (National clean air programme) மூலம் இந்திய அரசு காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் ஏற்படும் மாசுவை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவில் காற்றின் தரத்தை கண்காணிக்கவும், சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதை உறுதி செய்யும் இந்த அமைப்பு நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் பரவலாக நிகல்நேர காற்று மாசு கண்காணிப்பு மானியை கொண்டு கண்காணித்து வருகிறது. மேலும், காற்று மாசுபாட்டிற்கான காரணத்தை கண்டறிந்து அதனை குறைப்பதற்கான நடவடிக்கையும் இந்த திட்டத்தின் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்திய முழுவதும் உள்ள நகரங்களில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு,  பாட்னா, ஆக்ரா உள்ளிட்ட 10 நகரங்கள் பாதுகாப்பான அளவில் காற்றின் தரம் இல்லாத முதல் 10 நகரங்களாக கண்டறியப்பட்டு, இதில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுவில் குளிர்காலத்தில் மட்டுமே காற்று மாசுபாடு அதிகம் உள்ளது என்ற கருத்தை அண்மையில் வெளியான காற்று மாசு தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு உடைத்துள்ளது.

இந்தியாவில் வெயில் காலம் எனப்படும் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசு குளிர்காலம் போன்றே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என  நிகல்நேரத்தில் கண்காணிக்கப்படும் காற்று மாசு அளவிடும் மானியின் தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காற்று மாசு அதிகம் உள்ள 10 நகரங்களில் சென்னையில் மட்டும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசுபாடு குறைந்துள்ளது எனவும் பாதுகாப்பான அளவில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில், கொடுங்கையூர், அரும்பாக்கம், மணலி, வேளச்சேரி, ஆலந்தூர், ராயபுரம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் காற்று மாசு நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது. இதில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் காற்றில் நுண்துகள் PM2.5 பாதுகாப்பான அளவு (50 mu/m3 - ஒரு குபீக் மீட்டரில் 50 மைக்ரோ கிராம்)  இருந்துள்ளதாகவும்,  PM 10 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் பாதுகாப்பான  அளவிலும், மார்ச் மற்றும் மே மாதத்தில் பாதுகாப்பற்ற அளவிலும் இருந்துள்ளதாக  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மற்ற நகரங்களில் அதாவது காற்றில் மாசு அதிகம் ஏற்படக்கூடிய  முதல் 10 நகரங்களில் சென்னையை தவிர வேறு எந்த நகரமும் காற்றில் மாசு ஏற்படுத்துவதை குறைத்து பாதுகாப்பான அளவிற்கு காற்றின் தரத்தை மேம்படுத்தவில்லை. எனவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெயில் காலத்தில் சென்னையில் காற்று மாசு பாதுகாப்பான அளவில் இல்லை என்பதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.