சுற்றுச்சூழல்

பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் வாழ்வின் முடிவல்ல!

பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் வாழ்வின் முடிவல்ல!

webteam


மக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் உயிரிழக்கும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாததே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சி, அப்பகுதியில் சுற்றியுள்ள திசுக்களையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. இந்த நோயே புற்றுநோயாகும். சரியான சிகிச்சை எடுக்காமல் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் புற்றுநோய் மரணத்தை உண்டாக்குகிறது. பாலின வேறுபாடின்றி அனைவருமே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து முதன்மை தடுப்பு முறை மூலம் புற்றுநோயை தடுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புற்றுநோய் குறித்து உலக சுகாதார நிறுவனம்  வெளியிட்டுள்ள சில தகவல்கள்:

  • உலக அளவில் உயிரிழப்பு ஏற்பட இரண்டாவது காரணமாக புற்றுநோய் உள்ளது. 2018ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக 9.6 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழக்கும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
  • மிகவும் வருமானம் குறைவான அல்லது சராசரி வருமானத்தை கொண்ட நாடுகளில் தான் 70% உயிரிழப்புகள் புற்றுநோயால் உண்டாகின்றன
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளாமை, உடற்பயிற்சி செய்யாமை, புகையிலை மது பழக்கம், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட காரணங்களால் 3ல் ஒருவர் புற்றுநோயால் உயிரிழக்கிறார்
  • புற்றுநோய் உயிரிழப்புகளில் புகையிலை பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சராசரியாக 22% புற்றுநோய் உயிரிழப்புகளுக்கு புகையிலை பொருட்கள் காரணமாகின்றன
  • அதிக வருமானம் உள்ள நாடுகளில் புற்றுநோயுக்கான சிகிச்சைகள் 90% கிடைப்பதாக கூறப்படுகிறது.
  • வருமானம் குறைந்த அல்லது சராசரி வருமானம் கொண்ட நாடுகளில் 5ல் ஒரு நாடு தான் புற்றுநோய் கொள்கையை இயக்க தேவையான தரவுகளை கொண்டுள்ளது.

புற்றுநோயுக்கான அறிகுறிகள்:

  • உடலில் தேவையில்லாத கட்டிகள் உண்டாவது. வலி இல்லாவிட்டாலும் கட்டிகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்
  • பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக்கோளாறுடன் கூடிய வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்
  • தொடர் இருமல், மாதவிடாய் இல்லாத சமயத்திலும் உதிரப்போக்கு
  • மேற்கொண்ட பிரச்னைகள்  என்றாலே புற்றுநோய் தான் என்ற உறுதி இல்லை என்றும் ஆனால் இவையும் புற்றுநோயுக்கான ஆரம்பகால அறிகுறி என்பதால் எச்சரிக்கை அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

  • புகையிலை மதுப்பழக்கத்தை அடியோடு கைவிடுவது
  • புகைப்பிடித்தலை கைவிடுவது மற்றும் புகைப்பிடித்தல் இல்லாத சுற்றுப்புறத்தை உறுதி செய்தல்
  • சரியான உணவுக்கட்டுப்பாடு. காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது
  • சரியான உடற்பயிற்சி செய்து உடல்நிலையில் கவனம் கொள்ளுதல்
  • கதிரியக்க இடங்களில் பணியாற்றுவோர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுதல்
  • ஆரம்ப அறிகுறைகளை கண்டறிந்து முதன்மை தடுப்பு முறையை மேற்கொள்வது

புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றும் மன உறுதியும், முறையான சிகிச்சையும், நோயுக்கான அறிகுறிகளை அறிந்து முன்னரே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.