சுற்றுச்சூழல்

ஆர்க்டிக் காட்டுத்தீ - சென்ற ஆண்டைவிட 35% அதிக கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியீடு

ஆர்க்டிக் காட்டுத்தீ - சென்ற ஆண்டைவிட 35% அதிக கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியீடு

Sinekadhara

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை வழங்கிய தரவுகளின்படி, இந்த ஆண்டு காட்டுத்தீயால் ஆகஸ்ட் 24 வரை 245 மெகாடோன்கள் கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 181 மெகாடோன்கள். அதாவது ஆர்க்டிக் காட்டுத்தீ மூலம் 2019ஆம் ஆண்டு வெளியான கார்பன் -டை-ஆக்ஸைடை விட 2020ஆம் ஆண்டு 35% அதிகமாக வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டுகளைவிட காட்டுத்தீயின் அளவு இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது. இதனால் சைபீரியாவின் வெப்பநிலை 30C (86F)க்கும் அதிகமான உயர்ந்துள்ளது. காப்பர்நிகஸின் மூத்த விஞ்ஞானி டாக்டர் மார்க் பாரிங்டன் கூறுகையில், 2019 உடன் ஒப்பிடும்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெப்பம் கணிசமாக அதிகரித்துள்ளது. பல நாட்கள் தொடர்ந்த இந்த தீவிபத்துதான் வெப்பமயமாதலுக்குக் காரணம் என்கிறார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சுற்றுச்சூழல் புவியியல் உதவி பேராசிரியர் டாக்டர் தாமஸ் ஸ்மித் கூறுகையில், ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஆர்க்டிக் காட்டுப்பகுதிக்கு ஒரு ஒழுங்கற்ற ஆண்டாக இருந்தது என்றார். 2003 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் பதிவின்படி, கடந்த இரண்டு வருடங்களாக முரண்பாடான செயல்கள் நடந்துவருவதாக அவர் கூறுகிறார். மேலும் இதுபோன்ற தீவிபத்துகள் ஆண்டாண்டு காலமாக இருக்கும் கார்பன் வளங்களையும் எரித்துவிடுகிறது எனவும் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஆர்க்டிக் காட்டுத்தீ கவலையை உருவாக்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இந்த தீ பரவலாகவும், தொடர்ந்தும் வருகிறது. ஜூன் மாதத்தில் ரஷ்யா வான்வெளி வன பாதுகாப்பு சேவையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களால் சில பகுதிகளை அணுகமுடியவில்லை. கடந்த ஆண்டின் தீவிபத்து, ஐரோப்பிய ஒன்றிய நிலப்பரப்பைவிட அதிக புகைமண்டலத்தை உருவாக்கியது.