Galaxy  AI
சுற்றுச்சூழல்

மிகப்பெரிய மர்மத்துக்கு விடை? கிடைச்சாச்சு மாஸான ‘காஸ்மிக் க்ளூ’! உடைக்கப்படும் பிரபஞ்ச ரகசியம்?

தொலைதூர விண்மீன் மண்டலத்தில் மங்கலாகத் தெரிந்த நட்சத்திரங்களின் நீண்ட தடயம் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றை புரிந்துகொள்ள வானியலாளர்களுக்கு புதிய வழியைத் திறந்திருப்பது தான் இப்போதைய பேசுபொருள்.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

நம் விண்வெளி மண்டலம் மர்மங்கள் நிறைந்தது என்றால் மனிதனின் அறிவு அதை விட ஆச்சரிய அதிசயமானது. அண்ட வெளியை அலசி ஆராய்ந்து, தோண்டித் துருவி விடை தெரியாத மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறான். அப்படித்தான் தற்போது ஒரு கண்டுபிடிப்பு உலகையும் விஞ்ஞானிகளையும் வியப்படையவைத்துள்ளது.

தொலைதூர விண்மீன் மண்டலத்தில் மங்கலாகத் தெரிந்த நட்சத்திரங்களின் நீண்ட தடயம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றை புரிந்துகொள்ள வானியலாளர்களுக்கு புதிய வழியைத் திறந்திருப்பது தான் இப்போதைய பேசுபொருள்.

ஹபுள் விண்வெளித் தொலைநோக்கியின் பழைய தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், பால்வெளி மண்டலத்துக்கு வெளியே கண்டறியப்பட்ட முதல் ‘குளோபுலர் கிளஸ்டர்’ நட்சத்திரத் தடத்தை கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 11.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள UGC 9050-Dw1 என்ற விண்மீன் மண்டலத்தில் இந்த தடம் காணப்பட்டுள்ளது.

அடர்த்தியான நட்சத்திரக் கூட்டம், தனது தாய் விண்மீன் மண்டலத்தின் ஈர்ப்பு விசையால் மெதுவாகச் சிதைவடைந்து, நட்சத்திரங்களை இழக்கும்போது இந்த நீண்ட, குறுகிய தடம் உருவாகிறது.

இந்த நட்சத்திரத் தடத்தைப் பயன்படுத்தி, அந்த விண்மீன் மண்டலத்தின் ஈர்ப்பு விசை, மொத்த நிறை மற்றும் கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் அளவை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலும், கண்ணுக்குத் தெரியாத ஆனால் ஈர்ப்பு விசையைக் கொண்ட மர்மப் பொருளான ‘டார்க் மேட்டர்’ எனப்படும் இருண்ட பொருளின் அளவையும் மதிப்பிட்டுள்ளனர்.

Galaxy

இந்த கண்டுபிடிப்பு, பால்வெளி மண்டலத்துக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டலங்களிலும் ‘டார்க் மேட்டர்’-ரி ன் அமைப்பை ஆராய நட்சத்திரத் தடங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகள் ‘Nature’ இதழில் வெளியாகியுள்ளன.

ஹபுள் தொலைநோக்கியின் பார்வைப் பரப்பளவு குறைவாக இருப்பதால், இதுபோன்ற மங்கலான நட்சத்திரத் தடங்களை கண்டறிவது மிகவும் அரிதானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், நாசாவின் ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளித் தொலைநோக்கி மூலம் இதுபோன்ற பல தடங்களை கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹபுளை விட சுமார் 100 மடங்கு அதிகமான பார்வைப் பரப்பளவை ஒரே படத்தில் இது பதிவு செய்யும்.

நட்சத்திரத் தடங்கள், ஒரு விண்மீன் மண்டலத்தின் கடந்த கால வரலாற்றை அறிய உதவும் ‘பிரபஞ்ச தடயங்களாக’ செயல்படுகின்றன. அவற்றின் அமைப்பை ஆய்வு செய்வதன் மூலம் விண்மீன் மண்டலத்தின் நிறை மற்றும் கண்ணுக்குத் தெரியாத ‘டார்க் மேட்டர்’ பரவலை விஞ்ஞானிகள் கணிக்க முடியும்.

நட்சத்திரத் தடங்களில் காணப்படும் இடைவெளிகள் அல்லது திரள்கள், சிறிய டார்க் மேட்டர் கூட்டங்கள் அவற்றைக் கடந்து செல்வதால் உருவாகலாம் என கருதப்படுகிறது. இதுபோன்ற மேலும் பல தடங்கள் கண்டறியப்பட்டால், டார்க் மேட்டரின் தன்மை குறித்த முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.