சுற்றுச்சூழல்

உடலிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்துகிடந்த யானை - தடாகம் அருகே அதிர்ச்சி!

Sinekadhara

கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உயிரிழந்தது. கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பது வன உயிரி ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனச்சரக அலுவலர்கள் தடாகம் வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள்முடி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காப்புக் காட்டிற்கு அருகேயுள்ள தனியார் நிலத்தில் யானை ஒன்று உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன்பேரில் இன்று காலை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது உயிரிழந்தது சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.

மேலும் ஆந்த்ராக்ஸ் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேக எழுந்ததால் ஆந்த்ராக்ஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் உயிரிழந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் எனவும், அதன் உடல்நிலையை ஆய்வு செய்ததில் யானையின் உடலிலிருந்து ரத்தம் வெளியேறி இருப்பதாகவும், ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறி இருப்பதாலும் இந்த பரிசோதனை முடிவு வந்ததற்குப் பிறகு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.