சுற்றுச்சூழல்

‘மண், வைக்கோல், பனை ஓலையால் வீடு’- ஸ்ரீதர் வேம்புவின் குளுகுளு அலுவலக கட்டடம்

Veeramani

மண், வைக்கோல் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் மூலமாக உருவாக்கப்பட்ட அலுவலகத்தின் படங்களை ட்விட்டரில் பகிந்துள்ளார் ஜோஹோவின் பில்லியனர் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு. இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மண், பனை மரங்கள் மற்றும் வைக்கோல் மூலமாக உருவாக்கப்பட்ட தனது நிறுவனத்தின் புதிய கூட்ட அரங்கம் மற்றும் அலுவலகத்தின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.



இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், "புதிய கூட்ட அறை மற்றும் சிறிய அலுவலகங்கள், மண், வைக்கோல் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டுள்ளன. மேல்மாடியானது பனை ஓலையால் மூடப்பட்டிருக்கிறது. வெப்பமான நாளிலும் இந்த கட்டடம் மிக இதமானதாக உள்ளது. நான் இதை மிகவும் விரும்புகிறேன், நான் இந்த கட்டடத்தை எனது அலுவலகமாக மாற்றியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்



சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு பக்கமுள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டார். ‘ஜோஹோ டெஸ்க்’ இங்கிருந்து தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிராண்ட் செய்யப்படுகிறது.