தற்போதுள்ள கல்வி பாடத்திட்டத்தால் அடிப்படை அறிவு இல்லாத நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள் என புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிப்புக்கான கருத்து கேட்பு கூட்டம் கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை முன் வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் அனந்த கிருஷ்ணன், தமிழகத்தில் பல வருடங்களாகவே ஒரே பாடத்திட்டம் இருப்பதாகவும், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். தற்போதுள்ள கல்வி பாடத்திட்டத்தால் அடிப்படை அறிவு இல்லாத நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.