கல்வி

தமிழகத்தில் 'நீட்' நீடிக்குமா, ரத்தாகுமா? - ஒரு விரைவுப் பார்வை

Veeramani

தமிழ்நாட்டில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அப்படியானால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுகிறது.

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவிக்க, அதனை உறுதி செய்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நீட் தேர்வு தொடர்பான அமைச்சர்களின் கருத்துகளை, அரசியல் பேச்சாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, தமிழக அரசு சட்டம் இயற்றுவதால் எந்த பயனும் இல்லை என வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் நீட் நுழைவு தேர்வு தொடர்பாக தமிழகம் சட்டம் இயற்ற வாய்ப்பே இல்லை என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசே நடத்தலாம் என்ற வாதத்தை முன் வைக்கும்பட்சத்தில், மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியும் என்கிறார் மற்றொரு வழக்கறிஞர் விஜயன்.

நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதுகுறித்த தெளிவான முடிவு கிடைக்கும். தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தாலும், ரத்து செய்யப்பட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதே வழக்கறிஞர்களின் ஒருமித்த கருத்து.