கல்வி

டிஜிட்டல் பாகுபாட்டை விதைக்கிறதா ஆன்லைன் கல்வி? - ஓர் அலசல்

டிஜிட்டல் பாகுபாட்டை விதைக்கிறதா ஆன்லைன் கல்வி? - ஓர் அலசல்

webteam

நவம்பர் 11 இன்று... தேசிய கல்வி தினம். குழந்தைகள் தினத்தன்று அவர்களை சிலாகித்துப் பேசுவதை விடவும், அவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை உயர்த்துவது இன்னும் சிறந்தது. அதனால், தேசிய கல்வி தினத்தில் இப்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கலைப் பற்றி பார்ப்போம்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11ஆம் தேதி, நாடு முழுவதும் கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது. கல்வி விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்தத் தினத்தில், நம் கல்வி அமைப்பையே கொரோனா பேரிடர் காலம் புரட்டிப் போட்டிருப்பதை இம்முறை கவனித்தாக வேண்டும்.

கொரோனா எனும் பேரலையில் சிக்கியுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடு இந்தியா. மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை மீண்டும் திறக்கவில்லை; திறக்கும் சூழலும் இல்லை.

பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதால், சில ஆசிரியர்கள், மாணவர்கள் இருக்கும் தெருவுக்கே சென்று பாடம் நடத்தியதை செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால், அதுவும் கொரோனா பரவல் சூழலில் சரியான வழிகாட்டலாகப் பின்பற்ற சொல்ல முடியாது. அப்படியான சூழலில்தான் ஆன்லைன் வழியே பாடம் நடத்துவதை அரசு வழிகாட்டியது. ஆனால், இந்த முறை அனைத்து மாணவர்களுக்கு சாத்தியமானதுதானா என்ற கேள்வி உடனே எழும்பியது.

கவலை தரும் ஆய்வு முடிவுகள்:

சமீபத்திய 'அசெர்' (Annual Status of Education Report) ஆய்வுபடி, இந்திய மாணவர்களில் 32.5 சதவிகிதமே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடிகிறது. அதிலும் 11 சதவிகித மாணவர்கள் மட்டுமே (அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சேர்த்து) நேரடியான ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்கிறார்கள். மீதமிருக்கும் 21.5 சதவிகித மாணவர்கள் வீடியோ அல்லது பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் மூலமே படிக்க முடிகிறது. இந்தியா முழுக்க அரசுப் பள்ளி மாணவர்களை மட்டும் தனித்துப் பார்த்தால் 8.1 சதவிகித மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் இருக்கிறது.

ஆன்லைன்வழிக் கல்வி மாணவர்களுடையே அரசுப் பள்ளி Vs தனியார் பள்ளி பெரும் பாகுபாட்டை விதைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததை மறுக்க முடியாது. தமிழக அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆயினும், அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை நிறைவாகக் கொண்டு சேர்க்குமா என்ற கேள்விக்குப் பதிலாக அமையவே இல்லை.

கிராமம் மற்றும் மலைப்பகுதிகளில் ஆன்லைன் கல்வி என்பது பெரும் சிக்கலுக்கு உரியது. இதுகுறித்து, மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமியிடம் பேசினோம். "முதலில், ஆன்லைன் கல்வியை மாணவர்கள் விருப்பப்பட்டுத்தான் கற்கிறார்களா என்பது முக்கியம். ஏனெனில், அப்பா, அம்மா கட்டணம் கட்டிவிட்டதால் கட்டாயமாக ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்வது என்பது ஒருவகை திணிப்புதான். அது அரசுப் பள்ளி மாணவராக இருக்கலாம் அல்லது தனியார் பள்ளி மாணவராக இருக்கலாம். யாராக இருந்தாலும் திணிப்பின் வழியாக கற்றுக்கொள்ள முடியாது.

'மலைப்பகுதிகளில் இணைய வசதியே இல்லை!'

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆன்லைன் கிளாஸ் வழியே கற்பித்தல் என்பது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. மிகக் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் முயற்சி செய்து பார்த்திருக்கலாம். டிவி மூலம் நடத்தப்படும் ஒரு வகுப்பை நான் பார்த்தேன். அதில் அந்த ஆசிரியர் பேசும் சொல்லாடல் எனக்கே குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் செந்தமிழில் பேசுகிறார். சிறிது நேரம் ஆங்கிலம் கலந்து பேசுகிறார். ஆசிரியரான எனக்கே புரியவில்லை என்றால், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இருக்கும் மாணவர்களின் நிலை என்னவென்று சொல்வது. மலைப்பகுதிகளில் இணைய வசதி கிடைப்பதில்லை என்பதை விட, இல்லை என்றே சொல்லிவிடலாம் அப்படியான நிலைதான் இருக்கிறது.

மாணவர்களும் ஆன்லைன் கிளாஸுக்காக மொபைலை ஆன் பண்ணிவிட்டு வேறு விஷயங்களிலும் ஈடுபடுவதைக் காண முடிகிறது. அதாவது வீடியோ கேம், யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது போன்றவை.

அரசு சார்ப்பில் உயர் பதவியில் இருப்பவர்கள் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது தோன்றி, குழந்தைகள் இந்தப் பேரிடர் காலத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என வழிகாட்டியிருக்கலாம். அதேபோல, ஆசிரியர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை அளித்திருக்கலாம். மலைப்பகுதியில் உள்ள குழந்தைகளைத் தவிர மற்ற மாணவர்களின் மொபைல் எண் இருக்கும். ஆசிரியர்கள் அவர்களைத் தொடர்புகொண்டு பேச அரசு வலியுறுத்தியிருக்கலாம். சில ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தினால் அப்படிச் செய்வது பாராட்டுக்குரியது.

ஓர் ஆசிரியர் கற்றுக்கொடுப்பதை, கற்றுக்கொடுக்கும் விதத்தை எந்த டிஜிட்டல் வடிவமும் கற்றுத்தந்துவிடாது என்பது என் எண்ணம். இந்த ஆன்லைன் கிளாஸ் வழியாக, மாணவர்களுக்கு கல்வியோடு தொடர்பு அறுந்துவிடாது பாதுகாக்கிறார்கள் என்பது மட்டுமே சற்று ஆறுதல்" என்றார்.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் என். மாதவனிடம் பேசினோம் "எந்தவொரு புதிய நடைமுறையிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பிறப்பு முதல் மரண சான்றிதல் பெறுவது வரை இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், கல்வி கற்பதிலும் கற்பிப்பதிலும் டிஜிட்டல் பயன்பாட்டை தவிர்க்க முடியாது. இது சாத்தியமா என்ற கேள்வி எழுதுவது இயல்புதான். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களின் குழந்தைகளின் / அன்றாட செயல்பாட்டில் இணையம் பங்கு வகிப்பதை நினைத்தால் கூடுதல் புரிதல் கிடைக்கும்

ஆனால், கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அனைவரும் படிக்கும் விதமாக ஏராளமான பள்ளிக்கூடங்கள் இருக்கும் எனச் சொன்னபோது நம்பியிருக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் சாத்தியமானது. இப்போது அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் டிவைஸ் அளிக்கப்பட வேண்டும். அதைப் பயன்படுத்த முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற என் கோரிக்கை தற்போது ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், எதிர்காலத்தில் சாத்தியமாகும். தேவையே அந்தச் சூழலை உருவாக்கும்.

கள நிலவரம்தான் என்ன?

இப்போதைய சூழலில், வீட்டுக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கிறது. (சில வீடுகளில் இல்லாதிருக்கலாம். பெரும்பான்மையாகச் சொல்கிறேன்) அப்படியுள்ள மொபையை அந்த வீட்டின் அப்பாவோ அம்மாவோ வேலைக்குச் செல்கையில் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அதனால், அவர்களின் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ள முடிவதில்லை. அதனால், பதிவு செய்யப்பட்ட வீடியோவைத்தான் மாலை நேரத்தில் பார்க்கிறார்கள். அதாவது லைவ்வாக கிளாஸில் கலந்துகொள்ள முடியவில்லை. இன்னும் சில வீடுகளில் இணையத் தொடர்பு சிக்கலும் இருக்கிறது. டிஜிட்டலில் கற்பித்தலைச் சொல்லிக்கொடுப்பதைப் போல எப்படி கற்றுக்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்

அனைத்து வசதிகளும் அமைந்து, ஆன்லைன் வழியே கற்றாலும், ஓர் ஆசிரியர் நேரடியாகக் கற்பிப்பதற்கு இணையாக ஒருபோதும் ஆகாது. ஏனென்றால், கல்வியின் முக்கிய நோக்கம் ஒரு குழந்தையி முழு ஆளுமைத் திறனைக் கொண்டு வருவது, அதனை செழுமைப்படுத்துவது, வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பது என நீண்ட செயற்பாட்டுக்கு நேரடி வகுப்புகளே உதவும். இடைக்கால ஏற்பாட்டுக்கு டிஜிட்டல் உதவும். மேலும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற புரிதலையும் இந்தச் சூழல் நமக்கு அளிக்கும்" என்கிறார் உறுதியாக.

கல்வியின் முதன்மையான விஷயம் அது எப்படிக் கற்பிக்கப்படுகிறது என்பதுதான். கணக்கு பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் வெறுப்பை விதைக்கும் ஆசிரியர் நினைத்தால் முடியும். எனவே, ஆன்லைன் வழி கல்வி என்பது குறித்து விரிவான உரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் தேசிய கல்வி தினத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

குறிப்பாக, கொரோனா பேரிடர் தந்துள்ள பாடங்களில் ஒன்றாக, தேவைப்படும் இடர்மிகு சூழல்களில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குமே ஆன்லைன் கல்வியை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும் என்பதும், இதன்மூலம் நம் நாட்டின் கல்வி அமைப்பில் 'டிஜிட்டல் பாகுபாடு' ஏற்படுவதை முழுமையாகத் தடுப்பது என்பதும் மிக மிக அவசியம்.

- தமிழினி