கல்வி

மெல்போர்ன் பல்கலைக்கழத்துடன் கை கோர்க்கும் சென்னைப் பல்கலைக்கழகம் - புதிய படிப்பு அறிமுகம்

சங்கீதா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து, இரட்டை பி.எஸ்.சி. படிப்பை வரும் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இரட்டை B.Sc., படிப்பு ( Blended B.Sc., Degree ) எனப்படும் இந்த பட்டப்படிப்பு அறிவியல் பாடப் பிரிவில், முதல் முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் (2022-2023) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிர் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள், இரட்டை பி.எஸ்.சி. பட்டப் படிப்பினை தேர்வு செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முதல் நான்கு செமஸ்டர்கள் மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்கள் செய்முறை வகுப்புகளுடன் கற்றுத்தரப்படும். இறுதியாண்டில் உள்ள மீதமிருக்கும் இரண்டு செமஸ்டர்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு முதன்மை பாடத்தை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம். 

மெல்போர்ன் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டப்படிப்பிற்கு இணையாக, சென்னை பல்கலைக்கழகத்தால் கற்பிக்கப்படும் இந்தப் புதிய பாடப்பிரிவு கருதப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் பயிலும் வகையில், இந்த இரட்டை B.Sc., படிப்பு ( Blended B.Sc., Degree ) அறிமுகம் செய்யப்படுகிறது. கல்வி மற்றும் ஆராய்ச்சியில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட சென்னைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையத்துக்கு, பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் நாளை மறுநாள் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த புதிய பட்டப்படிப்பினை மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து கண்காணிப்பார்கள் என்றும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.