கல்வி

உயர்க்கல்வி பயில்வோர் எண்ணிக்கையை உயர்த்த, விரிவுபடுத்தப்படும் ஆன்லைன் பட்டப்படிப்புகள்?!

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில், தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புகளை அதிகரிக்க பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC) அனுமதியளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஆன்லைன் கல்வி முறை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கேற்ப உயர்கல்வியை விரும்பிய கல்லூரியில் சேர்ந்து பெற இயலாதவர்களின் குறையைப் போக்கும் வகையில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கான புதிய வழியை பல்கலைக்கழக மானியக் குழு பரிசீலித்து வருகிறது. தற்போது பல்கலைக்கழகங்கள் மட்டும் தொலைதூரக் கல்வி வசதியை அளித்து வருகின்றன. இதனொரு பகுதியாக, தன்னாட்சி பெற்ற 900 கல்லூரிகள் நம்நாட்டில் உள்ள நிலையில், அவற்றில் ஆன்லைன் கல்வியை அனுமதிக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.

இளநிலை பட்டப்படிப்புக்கு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கு பட்டப்படிப்பை தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு தன்னாட்சி கல்லூரிகளில் ஆன்லைனில் படிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும், கல்லூரியில் வழக்கமாக நேரடியாக படிப்பதற்கு இணையான தகுதியும் ஆன்லைன் கல்விக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் படிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியை தன்னாட்சி கல்லூரிகள் பெறத் தேவையிருக்காது. இந்த படிப்புகளில் கணினி வழியாக நடத்தப்படும் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை இணைய வழியாகவே மதிப்பீடு செய்யும். ஆன்லைன் பட்டப்படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிட உள்ளது.