கல்வி

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் குறைப்பு

webteam

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார். ஏற்கெனவே 11 ஆம் வகுப்பில் கல்லூரி போன்று அரியர் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்த நடைமுறை கடந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ஆம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளது. வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், உயிரியல், தாவரவியல், வரலாறு தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட தேர்வுகளுக்கான நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 10 மணிமுதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற்று வந்த தேர்வுக்கு பதில் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் 10 நிமிடங்கள் கேள்வித் தாளை படிப்பதற்கும் 5 நிமிடங்கள் தேர்வர் விவரங்களை நிரப்புவதற்கும் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.