கல்வி

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி - மாணவர்கள் அவதி

webteam

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் தமிழில் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஒரே நேரத்தில் 590 மையங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் 22 மையங்களிலும் நேற்று தொடங்கி 5 தினங்களுக்கு நடைபெறுகிறது. இந்தாண்டு முதல் முறையாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் 30 மையங்களில் நேற்று நுழைவுத் தேர்வுகள் தொடங்கி காலை, மாலை என நடைபெற்றது. இம்மையங்களில் ஒன்றான திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலை மற்றும் மாலை நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி தமிழில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வெளியாகி உள்ளது.

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற தேர்வுகளைத் தமிழ் வழியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள், தமிழ்வழியில் நுழைவுத் தேர்வு எழுதும் வகையில் தயார்ப்படுத்தி வந்தோம். ஆனால் ஆங்கில கேள்வித்தாளால் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே தமிழில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதேபோல் பெற்றோர்களும், பிள்ளைகளுக்கு தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.

இது குறித்துப் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கூறிய போது, நுழைவுத் தேர்வுக்கான மேலிடப் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளார்கள். அவர்கள் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற அனைத்துக் குளறுபடிகளையும் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.