இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் PT
கல்வி

“தகுதிதேர்வு வச்சுத்தான் செலக்ட் பண்ணாங்க; ஆனா தகுதியான சம்பளம் இல்லை”-போராடும் இடைநிலை ஆசிரியர்கள்!

Jayashree A

தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் நேற்று நான்காவது நாளாக போராட்டம் நடைப்பெற்றது. அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 24350 அரசு ஆரம்ப பள்ளிகள் உள்ளன. அதில் பணியாற்றும் ஆசிரியர் ஊதிய முரண்பாடு இருப்பதாகக் கூறி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2009ம் ஆண்டு ஜூன் 1 ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும், அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையில் ஊதிய முரண்பாடு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

உதாரணமாக 1986ம் ஆண்டு பணியில் சேர்ந்தவரின் ஊதியம் ரூ. 1,200, 1996ல் ரூ. 4,500 2006ல் ரூ. 8,370 ஆனால் 2009 க்கு பிறகு பணியில் சேர்ந்தவரின் ஊதியம் ரூ.5,200 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மாதம் ரூ.20000 வரை வேறுபாடு இருப்பதாகவும், அதனை சரி செய்யக்கோரி கடந்த 14 ஆண்டுகளாக போராடி வருவதாக ஆசிரியர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2022ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதை அடுத்து ஊதிய முரண்பாட்டை ஆய்வு செய்ய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தமிழகமுதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி குழுவும் அமைக்கப்பட்டது .

இதில் நிதிதுறை செயலாளர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர் என மூவர் அந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர். 3 மாதத்தில் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விறுவிறுப்பாக 8 சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், குழுவில் தொய்வு ஏற்பட்டு விட்டதாக கூறி இடைநிலை பணிமூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தனர். அதன் பின் குழுவின் செயல்பாடுகள் மீண்டும் வேகம் எடுத்தன. ஆனால் இன்னும் அந்த பணிகள் முழுமையடையவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.