கல்வி

"பள்ளிகளை திறப்பது வரவேற்கத்தக்கது. ஆனால்..."-கல்வியாளர் சொல்வது என்ன?

kaleelrahman

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்க விஷயம் எனக் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆன்லைன் பயிற்சி வகுப்பு போதாது என்றும் தெரிவித்தார்.

“ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது வரவேற்கத்தக்கது. காரணம் என்னவென்றால் போட்டி தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. இந்த சூழ்நிலையில் ஒரு மாணவன் போட்டித் தேர்வுகளில் நன்றாக எழுத வேண்டுமென்றால் முதலில் பள்ளி தேர்வுகளில் சிறப்பாக எழுத வேண்டும்.

பள்ளி தேர்வை நன்றாக எழுத வேண்டுமென்றால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் போதாது. ரெகுலர் வகுப்புகள் தேவைப்படுகிறது. அதனால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க இருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல இன்னொரு பக்கம் உடல்நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அதனால் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிஇஓ தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று விரிவான ஆய்வு செய்து, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்களா என்பதை ஆராய்ந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம்.” எனத் தெரிவித்தார்.