கல்வி

உ.பி: மதிய உணவு குறித்து கேள்வி எழுப்பிய கிராம தலைவரின் கணவரை பிரம்பால் அடித்த ஆசிரியை

EllusamyKarthik

புகைப்படம் : கோப்புப்படம்

“உணவுப் பட்டியலில் (மெனு) உள்ளபடி ஏன் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை?” என ஆரம்ப பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியையிடம் கேள்வி எழுப்பிய கிராம தலைவரின் கணவர் பிரம்படி வாங்கி உள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜினோர் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் வட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.

அங்குள்ள நவாடா ராவண கிராமத்தில் இயங்கி வரும் ஆரம்ப பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணியை பார்வையிட சென்றுள்ளார் அந்த கிராம தலைவரின் கணவர் மோகித் குமார். 

அப்போது மதிய உணவில் என்ன ‘மெனு’ என அவர் கேட்க, பால் மற்றும் ‘Tahri’ (காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட கலவ சாத வகை) என அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் தங்களுக்கு பால் மட்டுமே கொடுக்கப்பட்டதாக அவரிடம் தெரிவித்தனர். அதையடுத்து அது குறித்து தலைமை ஆசிரியை பூனம் தேவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் அவர். 

அப்போது அவரை தலைமை ஆசிரியை பூனம், தன் கையிலிருந்த பிரம்பை கொண்டு தாக்கியதாக தெரிகிறது. அதை அங்கிருந்த நபர்கள் செல்போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளனர். மோகித், தாக்கப்பட்டது குறித்து அறிந்து கொண்ட உள்ளூர் மக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டுள்ளனர். அதையடுத்து ஆசிரியை பூனம் வகுப்பறை ஒன்றுக்குள் சென்று மறைந்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு வந்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். 

மேலும் என்ன நடந்தது என விசாரித்ததில் பூனம் மற்றும் மோகித் என இருவரும் ‘என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார்’ என மாறி மாறி குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியை பூனம் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.