கல்வி

மொட்டை அடித்து பிச்சை எடுத்து ஒப்பாரி வைத்து போராடும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்

நிவேதா ஜெகராஜா

பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மொட்டை அடித்தும், பிச்சை எடுத்தும், ஒப்பாரி வைத்தும் ஆசிரியர்கள் டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் கூறி வருகிறார். உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை” என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தேர்தல் வாக்குறுதி 177 -ஐ நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர் பணி நியமனத்திற்கு மறு நியமனத்திற்கான போட்டி தேர்வுக்கான அரசாணை 149- ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தியும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காத காரணத்தினால் மூன்றாவது நாளான இன்று மொட்டை அடித்தும், பிச்சை எடுத்தும், ஒப்பாரி வைத்தும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பேசிய அவர்கள், “பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் செய்ய இருக்கின்றனர். இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும். இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பணி வழங்கி விடுவோம் எனக் கூறிய முதல்வர் தற்போது வரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

நீண்ட காலமாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியிருக்கும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர்: சந்தானகுமார்