கல்வி

தொடர்ந்த குழப்பம்... தள்ளிப்போன பொறியியல் கலந்தாய்வு தேதி! அரசு அறிவிப்பின் முழு பின்னணி

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பி.இ., பி.டெக் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்து இருக்கக்கூடிய நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்காக சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது அவர்களுக்கான கலந்தாய்வு தேதி உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்படும் என்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து துணை கலந்தாய்வு அக்டோபர் 22, 23 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்றும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் அனைத்து வகை கலந்தாய்வும் நிறைவு பெறும் என்றும் உயர்க்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

முன்னதாக ஆகஸ்ட் 16-ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வின் முடிவுகள் வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நீட் தேர்வு முடிவுகளுக்கு முன் பொறியியல் கலந்தாய்வை நடத்தினால் பல மாணவர்கள், நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின் கல்லூரிகளில் இருந்து வெளியேறக்கூடும்.

இதை கருத்தில்கொண்டு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போயிருப்பதாக சொல்லப்படுகிறது. நீட் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளிவரும் என்பது தேதியாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், அவை விரைவில் வெளியாகலாம் என்றே சொல்லப்படுகிறது.