கல்வி

``மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை சி.யு.இ.டி”- பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

நிவேதா ஜெகராஜா

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை (சி.யு.இ.டி - CUET) கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “2022-23 ம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் சி.யு.இ.டி. மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. மேலும் சி.யு.இ.டி. மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலப் பல்கலைக்கழங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட்-ஐ அறிமுகப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், உயர்க்கல்வி மாணவர் சேர்க்கையிலும் நுழைவுத் தேர்வை கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சிதான் இது என தமிழ்நாடு அரசு கருதுகிறது.

மத்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கை இதனை தெளிவாக நிரூபணம் செய்துள்ளது. நீட் போலவே இந்த சி.யு.இ.டி-ம் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிக் கல்விமுறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்த நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். மேலும், மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும்.

NCERT பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத்தேர்வும், நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்கிடாது. பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80%-க்கும் அதிக மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினை சேர்ந்தவர்களாவர். எனவே NCERT பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவு தேர்வு, மத்திய பல்கலைகழகங்களில் சேர்வதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும்.

நீட் போலவே இத்தேர்வும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதோடு, மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் மேலும் புற்றீசல் போல வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. NCERT முறையை பின்பற்றுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு கொண்டுள்ள மறைமுக அழுத்தம், மத்திய பல்கலைக்கழகங்கள் அல்லாதவற்றின் மீது மாணவர்களின் சேர்க்கையை மையப்படுத்தும் செயல்முறையை இன்னும் வலிமையாக்கும் என்றே நாங்கள் கருதுகிறோம். காலப்போக்கில் இது NCERT பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் விலையுயர்ந்த பள்ளிகளை தேர்வுசெய்ய மாணவர்களைத் தள்ளுவதன் மூலம், மாநிலப் பாடத்திட்ட அடிப்படையிலான பள்ளிக்கல்வி முறையை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET-ஐ கட்டாயமாக்கும் இந்த நடவடிக்கை, மாநில அரசுகளின் பங்கினையும், உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பள்ளிக்கல்வி முறையின் முக்கியத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய போக்கு, மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே நாங்கள் கருதுகிறோம். ஆகவே, இந்த நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற்றிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.