கல்வி

முதுவோர் பழங்குடியின வகுப்பில் 10-ஆம் வகுப்பு முடித்த முதல் பெண்: 95 சதவீதம் எடுத்து சாதனை

webteam

திருப்பூர் உடுமலைப்பேட்டை மலைப்பகுதியில் வாழும் முதுவோர் பழங்குடி வகுப்பை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர், அவர்களது பழங்குடியின வகுப்பில் பத்தாம் வகுப்பு முடித்த முதல் பெண்ணாக மாறியதோடு மட்டுமல்லாமல், நடந்த தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மலைப்பகுதியில் வாழும் முதுவோர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த செல்லமுத்துவின் மகள் ஸ்ரீதேவி. பல இடையூறுகளுக்கு மத்தியில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீதேவி தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர்களது பழங்குடியின வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்த முதல் பெண்ணாக இவர் மாறியிருக்கிறார்.

இது குறித்து ஸ்ரீதேவி கூறும்போது “எங்களது ஊரில் மின்சார வசதியோ, தொலைப்பேசி பயன்படுத்துவதற்கான வசதியோ கிடையாது. இங்குள்ள பெரும்பாலான மாணவர்கள் அவர்களது படிப்பை ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளோடு நிறுத்திக் கொள்வார்கள்.  நாங்கள் தொலைப்பேசி பயன்படுத்த வேண்டுமானல் கூட சில ஊரை விட்டு கிலோ மீட்டர்கள் தாண்டிதான் செல்ல வேண்டும். நான் 95 சதவீதத்திற்கு மேலாக மதிப்பெண்கள் எடுத்திருப்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை.” என்று கூறினார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கேரள அரசு ஸ்ரீ தேவியை தேர்வுகளை எழுத வைக்க கேரள எல்லையிலிருந்து சிறப்பு வாகனத்தை இயக்கியது. அவரது தந்தையான செல்லமுத்து ஸ்ரீதேவியை தினமும் ஊரிலிருந்து கேரள எல்லைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து அவரது தந்தையும் விவசாயியுமான செல்லமுத்து கூறும்போது “ எனது மகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி அவளை இன்னும் படிக்க வைக்கும் முனைப்பில் தான் நான் இருக்கிறேன். அவளை நாங்கள் எங்கள் குடிசைக்குள் முடக்க விரும்ப வில்லை” என்றார்.

தமிழக பழங்குடியினர் சங்கத்தின் துணைத் தலைவர் ஷண்முகம் கூறும் போது “ கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிதான் செல்லமுத்து, ஸ்ரீதேவியை படிக்க வைத்தார். ஸ்ரீதேவியும் அந்த வாய்பை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார். இதனை முன்மாதிரியாகக் கொண்டு இனி இது போன்ற கிராமங்களில் இருந்து நிறைய மாணவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.”எனத் தெரிவித்தார்.