கல்வி

பிப்ரவரி 26 புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும் - தமிழக அரசு

Sinekadhara

தமிழ்நாட்டில் வருகிற 26-ஆம் தேதி 6-8 வகுப்புகளுக்கு புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்கபப்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

புத்தகப்பை இல்லாத நாளன்று மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு ரூ.1.2 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
பள்ளிகளுக்கு புத்தகங்கள் எடுத்துச்செல்வதை விடுத்து அனுபவங்கள்மூலம் வாழ்க்கை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் குறித்தும் புத்தகமில்லா தினத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவர்களின் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொண்டுவர திட்டமிடவும், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் பல்வேறு செயல்பாடுகளை செய்யவும், தேசிய அளவில் விருதுபெற்ற மாணவர்களின் குறும்படங்களை காட்டி அவர்களுக்கு கருத்தை அளித்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடிப்படை உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த நாளில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கலை திருவிழா போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் வகுப்புகள் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாரப் பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்களை நியமித்து இதனை மேற்பார்வையிட வேண்டும் என்றும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.