கல்வி

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானம்

Veeramani

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிடக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு முதல் நடத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் பொது நுழைவுத்தேர்வு முறை மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காது என்பதோடு விளிம்பு நிலை மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.



மேலும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயமும் உள்ளதாக முதல்வர் கூறினார். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக் கழங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும் முதலமைச்சர் வலியுறுத்தினார், இதைத் தொடர்ந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தத்தமது கருத்துகளை முன்வைத்தனர்.

பொது நுழைவுத்தேர்வு முறை வாபஸ் பெறப்பட வேண்டும் என அதிமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. திமுகவின் தோழமை கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தந்தன. எனினும் பாரதிய ஜனதா தீர்மானத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.