கல்வி

"ஆன்லைன் வகுப்புக்கு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது"- ஆலோசனை பெற உதவி எண் அறிவிப்பு

"ஆன்லைன் வகுப்புக்கு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது"- ஆலோசனை பெற உதவி எண் அறிவிப்பு

webteam

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் (ஆன்லைன்) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் வாட்ஸ்ஆப், நுண்வகுப்பறைகள் மற்றும் தொலைக்காட்சி வழியாக வகுப்புகள் தொடர்கின்றன.

இந்த நிலையில், இணையவழி வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இணையவழி கற்பித்தலுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளிகளும் கடைபிடிக்கவேண்டும். வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், இணையவழி வகுப்புக்கான கால அட்டவணை விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.

மாணவர்கள் இயல்பாக இணையவழி வகுப்புகளுக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கவேண்டும். வகுப்புகளில் பங்கேற்க குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.

கண்களை அடிக்கடி சிமிட்டுதல், கைகளைச் சுழற்றுதல் போன்ற உடல் மற்றும் மனநலன் சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அடிக்கடி அளிக்கவேண்டும். இரு வாரங்களுக்கு ஒருமுறை நடத்திய பாடங்கள் குறித்த விவரங்களை முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்தால், அவர்களுக்கு சாதனங்களின் பற்றாக்குறை இருப்பின், மூத்த குழந்தை அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் கல்வி தொடர்பான புகார்களை அளிக்க: grievancesredressal@tnpta@gmail.com
மனஅழுத்தம் தொடர்பான ஆலோசனைகளுக்கு: 14417