கல்வி

கோபிசெட்டிபாளையம்: மொட்டைமாடியில் ஆபத்தான முறையில் ஆன்லைன் வகுப்பு கவனிக்கும் மாணவர்கள்

கோபிசெட்டிபாளையம்: மொட்டைமாடியில் ஆபத்தான முறையில் ஆன்லைன் வகுப்பு கவனிக்கும் மாணவர்கள்

நிவேதா ஜெகராஜா

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மலைகிராமமான வினோபாநகரில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போன் சிக்னல் கிடைக்காததால் அவர்கள் பராமரிப்பின்றி கிடக்கும் மொட்டை மாடியில் ஆபத்தான முறையில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மலைகிராமமான வினோபா நகரில், சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த மலைகிராமத்தையொட்டியுள்ள வினோபா நகர், கம்பனுர், விளாங்கோம்பை உள்ளிட்ட கிராமங்களிலிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் இருப்பதால், 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து செல்போன் மூலம் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்றுகொடுத்து  வருகின்றனர். இந்த நிலையில் வினோபா நகர், கம்பனூர், விளாங்கோம்மை உள்ளிட்ட மலைகிராமங்களில் செல்போன் டவர் எதும் இல்லாத நிலையில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று கொள்ள சிக்னல் கிடைக்கும் ஓரிடத்தில் வந்து ஆன் லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர்.

இக்கிராமத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் பாடம் கற்கும் போது சில நேரங்களில் சிக்னலில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சூழலில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக தினமும் காலை சிக்னலை தேடி தேடி உயரமாக பகுதிகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பராமரிப்பின்றி பயன்படுத்தாதல் இருக்கும் ஒரு பழைய கட்டிட மொட்டை மாடியில் சென்று தினமும் பாடம் கற்று வருகின்றனர்.

சிக்னல் சரிவர கிடைக்காத நிலையில் பாடங்கள் புரிவதில்லை என்ற குற்றச்சாட்டை மாணவர்கள் முன்வைக்கின்றனர். பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு என்றால் இருசக்கர வாகனங்கள் மூலம் அருகில் உள்ள வாணிப்புதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்றுக்கொண்டு வருவதாகவும், மற்றவர்கள் சிறுவர்கள் என்பதால் தங்களை அவ்வளவு தூரம் செல்ல பெற்றோர்கள் அனுமதி அளிப்பதில்லை எனவும் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவிக்கினறனர்.

இந்த சிக்னல் பிரச்னை மாணவர்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியிலுள்ள ரேசன் கடைக்கும் ஏற்படுவதால் சில நாள்களில் பொருள்கள் விநியோகம் தடைபடுகிறது என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

அரசு சார்பாகவோ தனியார் நிறுவனங்கள் சார்பாகவோ செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டால், தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென கூறுகிறார்கள் அவர்கள்.

- டி.சாம்ராஜ்