Student Visa Day
Student Visa Day pt desk
கல்வி

வருடாந்திர மாணவர் விசா தினம்: அமெரிக்கா - இந்தியா உயர்க்கல்வி உறவின் கொண்டாட்டம்!

PT WEB

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஏழாவது வருடாந்திர மாணவர் விசா தினத்தை நாடு முழுவதும் இன்று கொண்டாடிய நிலையில், புதுடெல்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் இயங்கிவரும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் சுமார் 3,500 இந்திய மாணவர் விசா விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தனர்.

Student Visa Day

சர்வதேச மாணவர்களுக்கான உலகின் முன்னணி கல்விக்களமாக விளங்கும் அமெரிக்காவுக்கு, இந்திய மாணவர்கள் படிக்கச் செல்வதுண்டு. அம்மாணவர்களின் நீளமான பட்டியலில் இவ்வருடம் இடம்பிடிக்கும் இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டியும் இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள துணைத்தூதர்களும மாணவர் விசா தின வாழ்த்துகளை இன்று தெரிவித்தனர்.

இத்தினம் குறித்து தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், “முதன்முதலில் ஒரு இளம் மாணவனாக நான் இந்தியாவுக்கு வந்தேன். இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை எனது சொந்த வாழ்க்கையில் நான் கண்டேன். மாணவர் பரிமாற்றம் என்பது அமெரிக்க-இந்திய உறவுகளின் மையமாக உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்வியையும் உலகளாவிய அறிவையும் மாணவர்களுக்கு அமெரிக்க கல்வி வழங்குகிறது. சிறப்பான‌ புரிதலுக்கான அடித்தளத்தை இது அமைக்கிறது. அதனால் தான், முடிந்தவரை பல இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்கி, ஊக்குவிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

Student Visa Day

அமெரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உயர்கல்வி உறவுகளை மாணவர் விசா தினம் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, 2,00,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் இது 20 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.

இதுபற்றி இந்தியாவில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பு அமைச்சக ஆலோசகர் பிரெண்டன் முல்லார்கி கூறுகையில் “கடந்த ஆண்டு, 1,25,000 இந்தியர்களுக்கு மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இது வேறு எந்த நாட்டினருக்கும் வழங்கப்பட்டதை விட அதிகமாகும். வழங்கப்பட்ட மொத்த விசாக்களின் எண்ணிக்கையில் இது 20%க்கும் கூடுதல் ஆகும். முன்னெப்போதையும் விட அதிக மாணவர்களை இந்த ஆண்டு நாங்கள் நேர்காணல் செய்வோம்" என்று குறிப்பிட்டார்.

Student Visa Day

கல்வி நிறுவன சேர்க்கை மற்றும் விசா செயல்முறைகள் தொடர்பான‌ வழிகாட்டுதலுக்காக‌ அமெரிக்க அரசால் வழங்கப்படும் இலவச ஆலோசனை சேவையான எஜூகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA)வைத் தொடர்பு கொண்டு நம்பகமான மற்றும் விரிவான தகவல்களைப் பெறுவதற்கு அமெரிக்காவில் படிக்க ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களையும் அமெரிக்க தூதரகம் ஊக்குவிக்கிறது.

இந்தியா முழுவதும் எட்டு ஆலோசனை மையங்களைக் கொண்டுள்ள எஜூகேஷன் யுஎஸ்ஏ, அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் தகவல்கள் அறிய educationusa.state.gov இணையதளத்தையோ அல்லது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் @educationUSAIndia பக்கங்களையோ மாணவர்கள் பார்வையிடலாம்.