கல்வி

போட்டித் தேர்வுகளுக்கு விழிப்புணர்வும் பயிற்சி மையங்களும் ஏற்படுத்துங்கள்: உயர் நீதிமன்றம்

போட்டித் தேர்வுகளுக்கு விழிப்புணர்வும் பயிற்சி மையங்களும் ஏற்படுத்துங்கள்: உயர் நீதிமன்றம்

jagadeesh

போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது தமிழக மாணவர்களிடையே குறைந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை, இதுகுறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பயிற்சி மையங்களையும் அமைக்க வேண்டும் என்று அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் யோசனை தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தங்கள் கவலையைப் பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் நீட் (NEET), ஜே.இ.இ. (JEE) போன்ற தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால், மருத்துவம் மற்றும் பொறியியலைத் தவிர்த்து பிற உயர்படிப்புகளைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு அது தொடர்பான வழிகாட்டல்களை வழங்க போதுமான வாய்ப்புகள் இல்லை.

மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து மேலாண்மை, சட்டம், கல்வியியல், கணக்குத்தணிக்கை, விவசாயம், கவின்கலை என பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றிற்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவம், பொறியியல் தவிர்த்து பிற துறைகள் சார்ந்த விவரங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க தேவையான அமைப்புகளும் இல்லை. ஆகவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்கல்வி தொடர்பான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்தும் அதற்கான பயிற்சி அளிப்பதற்கும் பயிற்சி மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், வெவ்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள், உயர் கல்வி விபரங்கள், அதற்கான கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட விபரங்களை மாணவர்களிடம் கொண்டு கொண்டு சேர்க்கும் வகையில் துவக்க முகாம்கள் மற்றும் இணைய வழியிலான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழலை அரசு உருவாக்கிவிட்டது.

ஆகவே, பல துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புகள், அதற்கான பயிற்சிகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலானவர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த தேர்வுகளுக்கு பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை. ஆகவே, மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஆனால், அரசு மட்டுமல்ல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பயிற்சி மையங்களை அமைக்கலாம்.

வாக்குக்காக மட்டுமல்ல; வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளை பயன்படுத்த அவர்களை உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும்" என்று கருத்து தெரிவித்து, இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.