கல்வி

பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் உத்தரவு.. யாருக்கெல்லாம் தெரியுமா?

webteam

பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப் படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

கொரோனா காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால் மாணவர்கள் நலன் கருதி யுஜிசி மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு, இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு, அதேபோன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும் இந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்த விரிவான அரசாணையை வெளியிட உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு விலக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.