கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3 ஆம் தேதி (நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்தது.
அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படு கின்றன. முதல் நாளில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.